24 C
Colombo
Friday, December 6, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

ரணிலை நம்பிய சீவியம்

இவ்வாரம் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றதையடுத்து 2025 ஜனவரி 20 பதவியில் இருந்து இறங்கவிருக்கும் ஜோ பைடன் அமெரிக்காவின் 46ஆவது ஜனாதிபதி. 2020 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டபோது அவருக்கு 78 வயது. அவரே அமெரிக்க வரலாற்றில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட மிகவும் முதிய வேட்பாளராக இருந்தார். இரு வருடங்கள் கழித்து பைடன் தனது 80ஆவது பிறந்த தினத்தை கொண்டாடியபோது பதவியில் இருந்த வேளையில் 80ஆவது பிறந்த தினத்தைக் கொண்டாடிய முதல் அமெரிக்க ஜனாதிபதி என்று அவர் வரலாற்றில் பதிவானார்.

ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிடுவதற்கு பிரசாரங்களை பைடன் முன்னெடுத்த வேளையில் முதுமை காரணமாக உறுதியான முறையில் அவரால் செயல்படமுடியவில்லை. ஜனநாயக கட்சியினரின் வற்புறுத்தலை அடுத்து போட்டியில் இருந்து அவர் விலக துணை ஜனாதிபதி கமலா ஹரிஸ் களத்தில் இறங்கினார். பைடன் போட்டியில் இருந்து விலகியதை அடுத்து அமெரிக்க வரலாற்றில் மிகவும் முதிய ஜனாதிபதி வேட்பாளர் என்ற பெயர் டொனால்ட் ட்ரம்புக்கு வந்தது. அமெரிக்க வரலாற்றில் வயதில் மிகவும் முதிய ஜனாதிபதியாக இருக்கும் பைடனுக்கு பிறகு இரண்டாவது தடவையாக பதவியேற்க விருக்கும் ட்ரம்ப் முதிய வேட்பாளர் வரிசையில் இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.

மூன்றாவது இடம் றொனால்ட் றேகனுக்கு(69). ஐம்பதுக்கும் குறைவான இளம் வயதில் பதவிக்கு வந்த ஜனாதிபதிகள் என்று தியோடர் ரூஸ்வெல்ட் (42), ஜோன் எவ். கென்னடி (43), பில் கிளின்டன் (46), யூலிசெஸ் கிராண்ட் (46), பராக் ஒபாமா ( 47) என்று பதிவில் இருக்கிறது. இந்த விபரங்களை எல்லாம் இன்று வரிசைப்படுத்துவதற்கு ஒரு உள்நாட்டு அரசியல் காரணம் இருக்கிறது. காலியில் கடந்த வியாழக் கிழமை ஐக்கிய தேசிய கட்சியின் கூட்டம் ஒன்றில் உரையாற்றிய அதன் தவிசாளர் வஜிர அபேவர்த்தன முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்கவின் வயது மற்றும் ஆட்சி செய்யும் தகுதி குறித்து கருத்துக் கூறினார். உலக வல்லரசான அமெரிக்காவின் மக்கள் 78 வயதான டொனால்ட் ட்ரம்பை தங்களது ஜனாதிபதியாக தெரிவு செய்திருக்கிறார்கள். அது இலங்கைக்கு ஓர் உதாரணம். ஐ.தே க. தலைவர் ரணில் இன்னொரு 12 வருடங்களுக்கு நாட்டை ஆட்சி செய்யக்கூடிய தகுதியுடன் இருக்கிறார் என்று அபேவர்த்தன கூறினார்.

ரணிலின் ஞாபகசக்தி வேறு எவரையும் விட வலிமையானதாக இருக்கிறது. எதையாவது நாங்கள் மறந்து விட்டோமானால் உடனே அவரிடம் ஆலோசனை கேட்கிறோம். அடுத்த பாராளுமன்றம் அனுபவமற்ற உறுப்பினர்கள் நிறைந்த வேடிக்கையான இடமாக இருக்கும். இலங்கையில் இடதுசாரி அரசியலின் முடிவுக்கு அடுத்த பாராளுமன்றம் கட்டியம் கூறும் என்றும் அவர் குறிப்பிட்டார். பாராளுமன்ற தேர்தலில் எதிரணியின் பிரசாரம் தேசிய மக்கள் சக்தி அரசியல்வாதிகளின் அனுபவக் குறைவை முக்கியத்துவப்படுத்தியதாகவே இருக்கிறது. ரணிலை விட்டால் வேறு எவராலும் நாட்டைக் காப்பாற்ற முடியாது என்பது அவரைச் சார்ந்தவர்களின் அசைக்கமுடியாத நம்பிக்கை. அதை விட மக்களுக்கு கூறுவதற்கு அவர்களிடம் ஒன்றுமில்லை.

ரணில் 90 வயதுவரை நாட்டை ஆளக்கூடியவராக இருக்கிறார் என்று வேறு அவர்கள் கூறுகிறார்கள். ஐ.தே.க. பலவீனப்படுத்திய தலைவரையே மீட்சிக்கும் நம்பிக்கொண்டிருப்பதே அவர்களின் பெரிய பலவீனம். முதிய வயதிலும் அமெரிக்கர்கள் ட்ரம்பை தெரிவுசெய்கிறார்கள் என்று கூறும் அவர்கள் ரணிலை ஒருபோதும் இலங்கை மக்கள் ஜனாதி பதியாக தெரிவு செய்யாததற்கான காரணத்தை புரிந்துகொள்ளாமல் அவரின் புகழ்பாடுவதில் காலத்தை வீணே கழிக்கிறார்கள்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles