ரஷ்ய எதிர்க் கட்சித் தலைவர் ஓரிரு நாளில் இறக்க நேரிடும் !

0
231

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை கடுமையாக விமர்சிக்கும், ரஷ்ய எதிர்கட்சித் தலைவர் அலெக்ஸே நவால்னிக்கு மருத்துவ சிகிச்சை வழங்கவில்லை எனில், அவர் ஓரிரு நாளில் இறக்கக் கூடும் என, அவரது மருத்துவக் குழுவினர் எச்சரித்துள்ளனர்.
எப்போது வேண்டுமானாலும் அலெக்ஸே நவால்னிக்கு இருதய செயலிழப்பு அல்லது சிறுநீரக செயலிழப்பு ஏற்படலாம் என அவரது சமீபத்திய ரத்த பரிசோதனை முடிவுகள் குறிப்பிடுவதாகக் கூறுகிறார்கள் மருத்துவர்கள்.
சிறையில் இருக்கும் தனக்கு, கடுமையான முதுகு வலி மற்றும் காலில் உணர்வின்மை போன்ற பிரச்சனைகளுக்கு, தனக்கு முறையான மருத்துவ சிகிச்சை வழங்கப்பட வேண்டும் என கடந்த 18 நாட்களாக உண்ணா விரதத்தில் இருக்கிறார் அலெக்ஸே நவால்னி.
ரஷ்ய அதிபர் புதினை கடுமையாக விமர்சிக்கும் இவர், ஒரு பழைய கையாடல் வழக்கின் கீழ் கடந்த பிப்ரவரி மாதம் சிறையில் அடைக்கப்பட்டார்.
அலெக்ஸே நவால்னியின் மருத்துவரான அனஸ்டாசியா வசில்யெவா உட்பட நான்கு மருத்துவர்கள், அலெக்ஸே நவால்னியை உடனடியாகக் காண சிறை அதிகாரிகளிடம் அனுமதி கேட்டு கடிதம் எழுதி இருக்கிறார்கள்.
அக்கடிதத்தை, மருத்துவர் அனஸ்டாசியா வசில்யெவா தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். அக்கடிதத்தில் அலெக்ஸே நவால்னியின் ரத்தத்தில் இருக்கும் பொட்டாசியம் அளவு மிகவும் மோசமான நிலையை அடைந்திருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
அதாவது அவரது சிறுநீரகமும், இதயமும் எப்போது வேண்டுமானாலும் பாதிக்கப்படலாம் என அதில் விளக்கப்பட்டுள்ளது.
ஒரு லிட்டர் ரத்தத்தில் 6.0 மில்லி மோல்ஸ்களுக்கு மேல் பொட்டாசியம் இருந்தால் அவர்களுக்கு உடனடியாக சிகிச்சை வழங்கப்பட வேண்டும். அலெக்ஸே நவால்னியின் ஒரு லிட்டர் ரத்தத்தில் 7.1 மில்லிமோல் பொட்டாசியம் இருப்பதாக அவரது ரத்தப் பரிசோதனை முடிவுகளில் குறிப்பிடப்பட்டிருப்பதாக, அக்கடிதத்தில் கூறப்பட்டு இருக்கிறது.
“அலெக்ஸே நவால்னியின் ரத்தப் பரிசோதனை முடிவுகளை கருத்தில் கொண்டும், இதற்கு முன் அவரைக் கொல்ல விஷ ஊசி போடப்பட்டதை கருத்தில் கொண்டும்” அவரை உடனடியாக பரிசோதிக்க அனுமதிக்குமாறு மருத்துவர்கள், சிறை அதிகாரிகளிடம் வலியுறுத்தி இருக்கிறார்கள்.
44 வயதாகும் அலெக்ஸே நவால்னிக்கு, ‘நோவிசோக்’ என்கிற நரம்பு மண்டலத்தை பாதிக்கும் ரசாயனம் செலுத்தப்பட்டது. அதனால் கடந்த ஆகஸ்ட் 2020-ல் கிட்டத்தட்ட இறந்தேவிட்டார் எனலாம். அப்போது அலெக்ஸே நவால்னி ஜெர்மனிக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.
தன்னை ரசாயனம் செலுத்தி கொல்ல முயன்றது புதின்தான் என குற்றம்சாட்டினார் நவால்னி, ஆனால் அதை ரஷ்ய அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது.
தன் கணவரின் உடல் எடை 76 கிலோவாக இருப்பதாகவும், இது அவர் உண்ணாவிரதம் இருப்பதற்கு முன்பு இருந்த உடல் எடையை விட 9 கிலோ குறைவு எனவும் அலெக்ஸே நவால்னியின் மனைவி யுலியா கூறியதாக ஏ பி செய்தி முகமை குறிப்பிடுகிறது.
நவால்னிக்கு விஷம் கொடுத்த பின் அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவர்களில் ஒருவரான அலெக்ஸாண்டர் பொலுபன், நவால்னியின் ரத்தப் பரிசோதனை முடிவுகளை பதிவிட்டிருக்கிறார். அதோடு, அவருக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை வழங்கப்பட வேண்டும் என்பதைத் தான் இந்த முடிவுகள் காட்டுகிறது. இல்லையெனில் அடுத்த சில நாட்களில் அவர் இறந்துவிடுவார் என எச்சரித்திருக்கிறார்.
நவால்னிக்கு போதிய மருத்துவ சிகிச்சை வழங்கப்படுவதை ரஷ்ய அதிபர் புதின் உறுதி செய்ய வேண்டுமென, 70-க்கும் மேற்பட்ட கல்வியாளர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் ஒரு கடிதத்தில் கையெழுத்திட்டு புதினுக்கு கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.
தி எகனாமிஸ்ட் மற்றும் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த லெ மாண்டே நாளேடு அக்கடிதத்தைப் பிரசுரித்திருக்கிறது.
அலெக்ஸே நவால்னிக்கு வழங்கப்படும் மருத்துவ சிகிச்சைகள் முற்றிலும் நியாயமற்றவை மற்றும் பொருத்தமற்றவை என நேற்று பத்திரிகையாளர்களிடம் கூறினார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன். ரஷ்ய அரசாங்கம்தான் நவால்னி மீது விஷத் தாக்குதலை நடத்தியது என கடந்த மார்ச் மாதம் அமெரிக்காவின் புலயான்வுத் துறை ஒரு முடிவுக்கு வந்திருக்கிறது.
ஜோ பைடன் அரசு மூத்த ரஷ்ய அதிகாரிகள் மீது தடை விதித்தது. தற்போது ரஷ்யாவும் அதே போல அமெரிக்க அதிகாரிகள் மீது தடை விதித்து பதிலடி கொடுத்துக் கொண்டிருக்கிறது.
தனக்கு கடுமையான முதுகு வலி இருப்பதாகவும், தன் வலது காலில் உணர்வின்மை இருப்பதாகவும் கூறுகிறார் நவால்னி. இந்த மாத தொடக்கத்தில் கூட, தொடர்ந்து இருமல் இருப்பதாகவும், காய்ச்சல் அடிப்பதாகவும் கூறினார் நவால்னி. எனவே பொக்ரோவ் நகரத்தின் சிறையில் இருக்கும் சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார்.
தன் மருத்துவக் குழுவினரே தனக்கு மருத்துவ சிகிச்சை வழங்க வேண்டுமென உண்ணா விரதத்தில் இறங்கினார் நவால்னி. ரஷ்ய சிறை அதிகாரிகளோ, தங்கள் தரப்பு மருத்துவர் கொடுக்கும் சிகிச்சையைப் பெற நவால்னி மறுத்துவிட்டதாகக் கூறுகிறார்கள்.
நவால்னியை சிறைக்குச் சென்று சந்திக்கும் அவரது வழக்குரைஞரோ, அச்சிறையில் மருத்துவர்களே இல்லை எனவும், அங்கு அவசர சிகிச்சையளிக்கும் ஒரே ஒரு பாராமெடிக் தான் இருக்கிறார் எனவும் கூறுகிறார்.
நவால்னி அடைக்கப்பட்டிருக்கும் சிறை, அதன் மோசமான மற்றும் கடினமான சூழல்களுக்கு பெயர் போனது என்கிறார்கள் மனித உரிமை செயற்பாட்டாளர்கள். நவால்னி அடைக்கப்பட்டிருக்கும் சிறையில் நிலவும் சூழல்கள், அவரை துன்புறுத்தும் விதத்தில் இருக்கும், அது அவரை மெல்ல கொல்லும் விதத்தில் இருக்கலாம் என அம்னெஸ்டி இண்டநேஷனல் கூறியுள்ளது