கிழக்கில் இருந்து வெளிவரும் விருந்து சிற்றிதழின் ஆறாவது வெளியீட்டு விழா இன்று அம்பாறை மாவட்ட கல்முனை வடக்கு பிரதேச செயலக மண்டபத்தில் ஓய்வு நிலை அதிபர் இ.இராஜரெத்தினம் தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக பிரதேச செயலாளர் ரி.ஜே.அதிசயராஜ், கலாசார உத்தியோகத்தர் ரி.பிரபாகரன், மாநகர சபை உறுப்பினர் கே.சிவலிங்கம், எழுத்தாளர் எஸ்.அரசரெத்தினம், விருந்து சிற்றிதழின் ஆசிரியர் செ.துஜியந்தன் உட்பட கலை இலக்கியவாதிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
நூல் அறிமுகத்தினை கவிஞர் நீலாவணை இந்திரா நிகழ்த்தியதுடன், நூலின் முதற் பிரதியை கல்முனை மாநகர சபை உறுப்பினர் கே.சிவலிங்கம் பிரதேச செயலாளர் ரி.ஜே.அதிசயராஜிடம் இருந்து பெற்றுக் கொண்டார்.
ஈழத்தின் சிற்றிதழ்களின் வளர்ச்சிக்கு கலை இலக்கிய ஆர்வலர்கள் மற்றும் கலாசார திணைக்களம் ஆதரவு வழங்க வேண்டும். அத்துடன் பல புதிய இளம் படைப்பாளிகள் உருவாக்குவதற்கு இவ்வாறான சிற்றிதழ்கள் களம் அமைத்து கொடுக்க வேண்டும் என பிரதேச செயலாளர் ரி.ஜே.அதிசயராஜ் குறிப்பிட்டார்.