ஹெரோயினுடன் கைதான சிறைக்காவலர் தடுத்து வைப்பு

0
259

புத்தளத்தில் ஹெரோயினுடன் கைதான சிறைச்சாலைக் காவலரை தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு புத்தளம் மாவட்ட மற்றும் நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஆர்.எஸ்.மௌபியா நேற்று (19) உத்தரவிட்டுள்ளார்.

களுத்துரை சிறைச்சாலையில் பணிபுரியும் கொச்சிக்கடையைச் சேர்ந்த 33 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

புத்தளம் பொலிஸ் போதை ஒழிப்புப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய புத்தளம் பகுதியில் நேற்று (19) அதிகாலை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 40 கிராம் 870 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேக நபரான களுத்துறை சிறைச்சாலையில் கடமைபுரியும் சிறைக்காவலர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட குறித்த சிறைக்காவலரை புத்தளம் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போதே தடுத்து வைத்து விசாரணை செய்யும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன், சந்தேக நபரை எதிர்வரும் 23ஆம் திகதி மீண்டும் மன்றில் ஆஜர்படுத்துமாறும் நீதிவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.