முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோரை விடுவித்து கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் வழங்கிய உத்தரவுக்கு எதிராக சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட உயர் நீதிமன்றம் வழக்கின் பிரதிவாதிக்கு அழைப்பாணை அனுப்ப நடவடிக்கை எடுக்குமாறு உயர்நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளது.
குறிப்பிட்ட புலனாய்வுத் தகவல் கிடைத்திருந்த போதிலும் ஈஸ்டர் ஞாயிறு அன்று பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்க நடவடிக்கை எடுக்காததன் மூலம் கடமை தவறியமை மற்றும் கொலை ஆகிய குற்றச்சாட்டுகள் அவர்கள் மீது சுமத்தப்பட்டிருந்தன.சட்டமா அதிபரினால் முன்வைக்கப்பட்ட மேன்முறையீட்டு மனுக்கள் மீதான நீண்ட விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் ப்ரீத்தி பத்மன் சூரசேன தலைமையிலான ஐவரடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் சட்டமா அதிபர் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.இந்த வழக்கை விசாரித்த மேல்நீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வுஇ பிரதிவாதி சாட்சியத்தை அழைக்காமலேயே குறித்த பிரதிவாதிகள் இருவரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தது.
மூவரடங்கிய மேல் நீதிமன்றத்தின் தீர்ப்பு சட்டத்திற்கு முரணானது எனவும் அதனை இரத்துச் செய்ய வேண்டும் எனவும் சட்டமா அதிபர் உயர் நீதிமன்றில் மேன்முறையீட்டு மனுக்களை சமர்ப்பித்திருந்தார்.
விசாரணைக்குப் பிறகு தீர்ப்பை அறிவித்த உயர் நீதிமன்ற அமர்வு விசாரணையின் போது பிரதிவாதிக்கு உயர்நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியிருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.அதன்படி இந்த தீர்ப்பு அறிவிக்கப்படுவதாக நீதிபதி குறிப்பிட்டார்.