24 C
Colombo
Wednesday, December 4, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

ஹைதராபாத்தை வீழ்த்தி இறுதியாட்டத்திற்கு முன்னேறியது டில்லி

ஹைதராபாத் அணியை 19 ஓட்டங்களால் வெற்றி கொண்ட டில்லி கப்பிட்டல்ஸ் முதல் தடவையாக ஐ.பி.எல்லின் இறுதியாட்டத்திற்குத் தகுதி பெற்றது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடக்கும் இந்தியன் பிறிமியர் லீக்கின் 13ஆவது தொடரின் இறுதியாட்டத்துக்கு தகுதி பெறுவதற்கான இரண்டாவது ஆட்டம் நேற்றிரவு அபுதாபியில் நடந்தது.

இதில், இறுதியாட்டத்துக்கு தகுதி பெறுவதற்கான முதல் போட்டியில் மும்பை அணியிடம் தோல்வியடைந்த டில்லி கப்பிட்டல்ஸ் அணியும், ‘வெளியேற்றும் ஆட்டத்தில்’ வெற்றி பெற்ற ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணியும் மோதின.

இறுதியாட்டத்திற்கு தகுதி பெறுமவதற்கான தீர்க்கமான இந்த ஆட்டத்தில் ஹைதராபாத் அணியில் எந்த மாற்றமும் இடம்பெறவில்லை. டில்லி அணியில் பிரித்வி ஷா, சம்ஸ் ஆகியோர் நீக்கப்பட்டு ஹெட்மேயர், பிரவின் டுபே ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற டில்லி கப்பிட்டல்ஸின் தலைவர் ஸ்ரேயாஸ் ஐயர் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தார்.

இதன்படி, ஸ்ரொய்னிஸ், தவான் இணை தொடக்கம் கொடுத்தது. இந்த இணை சிறப்பான ஆரம்பத் துடுப்பாட்டத்தை ஏற்படுத்தியது. இணைப்பாட்டமாக 86 ஓட்டங்கள் பெறப்பட்ட நிலையில் ஸ்ரொய்னிஸ் 38 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அவர் 5 பௌண்ட்ரிகள், ஒரு சிக்ஸர் அடங்கலாக அந்த ஓட்ட எண்ணிக்கையைப் பெற்றார்.

தவானுடன் இணைந்த ஸ்ரேயாஸ் ஐயர் நிதானமாக ஆடியபோதும், 21 ஓட்டங்களுடன் சந்தீப் சர்மாவின் பந்தில் எல்.பி.டபிள்யூ. முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

அதிரடியாக ஆடி அரைச்சதம் கடந்த தவான், 6 பௌண்ட்ரிகள், 2 சிக்ஸர்களுடன் 50 பந்துகளில் 78 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் ஆட்டமிழந்தார்.

20 ஓவர்கள் நிறைவில் டில்லி அணி 3 விக்கெட்களை மட்டுமே இழந்து 189 ஓட்டங்களைப் பெற்றது.

அதிரடியாக ஆடிய ஹெட்மேயர் 4 பௌண்ட்ரிகள், ஒரு சிக்ஸருடன் 42 ஓட்டங்களையும், ரிஷப் பந்த் 2 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

ஹைதராபாத்தின் பந்தில் சந்தீப் சர்மா, ஹோல்டர், ரஷீத் கான் ஆகியோர் ஒவ்வொரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

பதிலுக்கு 190 என்ற கடினமான இலக்கைத் துரத்தத் துடுப்பெடுத்தாடிய ஹைதராபாத் அணிக்கு கார்க்கும் கப்டன் வோர்ணரும் தொடக்கம் கொடுத்தனர். ஆனால், இவர்களால் அதிக நேரம் நீடிக்க முடியவில்லை. வோர்ணர் 2 ஓட்டங்களை மட்டுமே பெற்று ரபாடாவின் பந்தில் வெளியேறினார்.

எனினும் அடுத்து வந்த அடுத்து வந்த மனீஷ் பாண்டே அதிரடியாக ஆடினார். இதனால் ஓட்ட எண்ணிக்கை வேகமாக உயர்ந்தது. இந்நிலையில் நான்காவது ஓவரை வீசினார் ஸ்ரொய்னிஸ். அதில் கார்க் (17 ஓட்டங்கள்), மனீஷ் பாண்டே (21 ஓட்டங்கள்) என்று விக்கெட்களை சாய்த்தார்.

அடுத்து வந்த வில்லியம்ஸனும் ஹோல்டரும் இணைந்து ஆடினர். ஆனால், அவர்களால் பெரிதாக சாதிக்க முடியவில்லை. ஆரம்பத்தில் நிதானமாக ஆடிய அவர் அதிரடியாக ஆட முற்பட்ட சமயம் ஹோல்டர் 11 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

எனினும் தனது அதிரடியை வில்லியம்ஸன் தொடர அடுத்து வந்த அப்துல் சமத் வந்த வேகத்திலேயே பௌண்ட்ரி, சிக்ஸரை பறக்க விட்டார். 35ஆவது பந்தில் அரைச்சதம் வில்லியம்ஸன் கடந்தார்.

இறுதியில், 4 ஓவர்களில் 51 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில் வில்லியம்ஸன் 67 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். ஆனால், அதன்பிறகு ஹைதராபாத்தின் விக்கெட்கள் வேகமாக சரிய ஆரம்பித்தன.

இறுதியில் 20 ஓவர்களும் முடிவடைந்த நிலையில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 172 ஓட்டங்களையே ஹைதராபாத் அணி 17 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. இதனால், இறுதியாட்டத்துக்கு டில்லி கப்பிட்டல்ஸ் அணி முன்னேறியது. இதன் மூலம் நாளை நடக்கும் இறுதியாட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை டில்லி கப்பிட்டல்ஸ் எதிர்கொள்ளவுள்ளது.

டில்லியின் பந்து வீச்சில் ரபாடா 4, ஸ்ரொய்னிஸ் 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

38 ஓட்டங்களையும், 3 விக்கெட்களையும் அணிக்காகப் பெற்றுக் கொடுத்த ஸ்ரொய்னிஸ் ஆட்டநாயகனாகத் தெரிவானார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles