அமெரிக்காவின் ஃபுளோரிடா கடல் பகுதியில் சனிக்கிழமை இரவு கப்பல் கவிழ்ந்ததாகக் கூறப்படும் சம்பவத்தில் கடலில் மூழ்கிய 39 பேரை காணவில்லை என்று அமெரிக்க கடலோர காவல்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர்களை தேடும் பணி தொடர்வதாக அவர்கள் கூறியுள்ளனர்.
ஃபோர்ட் பியர்ஸ் நகரிலிருந்து 45 மைல் (72 கிமீ) தொலைவில் மூழ்கும் நிலையில் இருந்த ஒரு படகின் மேலோட்டத்தில் ஒருவர் ஒட்டிக்கொண்டிருப்பதை மீனவர்கள் கண்டதும் அது குறித்து அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
கடந்த சனிக்கிழமை இரவு பஹாமாஸின் பிமினியில் இருந்து படகில் சிலர் புறப்பட்டபோது மோசமான வானிலையால் படகு கடலில் மூழ்கியதாக உயிர் பிழைத்தவர் கூறியுள்ளார்.
இந்த படகு நாட்டுக்குள் நுழைய முற்படும் நபர்களை கடத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக இருக்கலாம் என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அடையாளம் காணப்படாத உயிர் பிழைத்தவரின் கூற்றுப்படி, படகில் இருந்தவர்கள் யாரும் உயிர்காக்கும் அங்கிகளை அணிந்திருக்கவில்லை.