அணித் தலைமையிலிருந்து விலகிய வில்லியம்சன் ‘கிவி’யின் மத்திய ஒப்பந்தத்தையும் நிராகரித்தார்

0
60

ருவகை மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கிரிக்கெட்டுக்கான தலைமைப் பதவியிலிருந்து விலகிக்கொண்டுள்ள கேன் வில்லியம்சன், நியூஸிலாந்து வீரர்களுக்கான மத்திய ஒப்பந்தத்தையும் நிராகரித்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் அரங்கில் நீடித்திருக்க வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டே தலைவர் பதவியைத் துறந்துள்ளதாக  அவர் குறிபபிட்டுள்ளார.

பப்புவா நியூ கினியுடனான சி குழுவுக்கான ரி20 உலகக் கிண்ணப் போட்டி முடிவடைந்த பின்னர் தனது பதவி விலகல் மற்றும் மத்திய ஒப்பந்தத்தை நிராகரித்தமை தொடர்பான அறிவிப்பை 33 வயதான கேன் வில்லியம்சன் விடுத்தார்.

இக் குழுவில் மேற்கிந்தியத் தீவுகள், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளுடனான போட்டிகளில் தோல்வி அடைந்ததால் முதல் சுற்றுடன் நியூஸிலாந்து வெளியேறியது.

எவ்வாறாயினும் தொடர்ந்து நடைபெறவுள்ள எட்டு ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் போட்டிகளிலும் பாகிஸ்தானில் அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண (50 ஓவர்) கிரிக்கெட் போட்டியிலும் நியூஸிலாந்துக்காக விளையாட அர்ப்பணிப்புடன் இருப்பதாக கேன் வில்லியம்சன் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு புறத்தில் வீரர்களுக்கான ஒப்பந்தத்தை நிராகரிப்பதாக குறிப்பிட்ட அவர், எதிர்காலத்தில் அந்த ஒப்பந்தத்தை ஏற்க தயார் எனவும் அவர் கூறினார்.

ஆனால், வெளிநாடுகளுக்கு செல்லவேண்டிவருவதால் மத்திய ஒப்பந்தத்தை நிராகரிக்க நிர்ப்பந்திக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

‘நியூசிலாந்துக்காக விளையாடுவதை நான் பாக்கியமாக கருதுகிறேன். அணிக்கு பிரதியுபகாராமாக எதையாவது கொடுக்க வேண்டும் என்ற எனது ஆவல் இன்னும் குறையவில்லை.

‘கிரிக்கெட்டுக்கு வெளியே எனது குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவிடுவதால் எனது வாழ்க்கை மாறிவிட்டுள்ளது. மேலும் உள்நாட்டிலோ வெளிநாட்டிலோ குடும்ப உறுப்பினர்களுடன் அனுபவங்களை பகிர்ந்துகொள்வது மிகவும் முக்கியமாகும்’ என்றார் கேன் வில்லியம்சன்.

வில்லியம்சனின் முடிவுக்கு பதிலளிக்கும் வகையில் கருத்து வெளியிட்ட நியூஸிலாந்து கிரிக்கெட் (NZC) நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஸ்கொட் வீனிங்க், ‘நியூசிலாந்து கிரிக்கெட்டுக்காக எவ்வளவோ நிறைவேற்றியுள்ள அவர் ஓய்வு எடுத்துக்கொள்வதற்கும் குடும்பக் கடமைகள் உட்பட பிற விஷயங்களில் கவனம் செலுத்துவதற்கும் வாய்ப்பு வழங்குவது மிகவும் பொருத்தமாகும்’ என்றார்.

‘கேனை (கேன் வில்லியம்சன்) சர்வதேச விளையாட்டில் தக்கவைத்துக்கொள்வது இது ஒரு சிறந்த வழியாகும், இதன் மூலம் அவர் இப்போதும் அடுத்து வரும் வருடங்களிலும் பிளாக் கெப்ஸுக்கு பிரதான பங்கு வகிப்பார்’ என வீனிங்க் கூறினார்.

நியூசிலாந்து வீரர்களுக்கான மத்திய ஒப்பந்தங்களின் இறுதி பட்டியல் அடுத்த மாதம் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பட்டியலில் இல்லாத மற்றொரு குறிப்பிடத்தக்க வீரர் லொக்கி பெர்கசன் ஆவார். அவர் மத்திய ஒப்பந்தத்தை ஏற்கப் போவதில்லை என ஏற்கனவே கூறியிருந்தார்.