நாட்டில் கடந்த 13ஆம் திகதி முதல் பெய்த கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக, 27 ஆயிரத்து 751 குடும்பங்களைச் சேர்ந்த 92 ஆயிரத்து 471 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
மேல் மாகாணம் தவிர ஏனைய அனைத்து மாகாணங்களிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.
கனமழையால் கிழக்கு மாகாணம் மிகவும் பாதிக்கப்பட்டதுடன், அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் 17 ஆயிரத்து 952 குடும்பங்களைச் சேர்ந்த 56 ஆயிரத்து 878 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்,
வட மாகாணத்தில் கிளிநொச்சி, யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் 7 ஆயிரத்து 970 குடும்பங்களைச் சேர்ந்த 29 ஆயிரத்து 299 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
வடமத்திய மாகாணத்தில், அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் ஆயிரத்து 369 குடும்பங்களைச் சேர்ந்த 4 ஆயிரத்து 599 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் 319 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.