முன்னணி நட்சத்திர நடிகரான அதர்வா முரளி- வளர்ந்து வரும் நம்பிக்கை நட்சத்திர நடிகரான மணிகண்டன் இருவரும் கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் ‘மத்தகம்’ எனும் இணையத் தொடரின் முதல் பார்வை வெளியிடப்பட்டிருக்கிறது.
இதனுடன் இணையத் தொடரை விளம்பரப்படுத்துவதற்கான குறு முன்னோட்ட காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் பிரசாத் முருகேசன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் இணைய தொடர் ‘மத்தகம்’. இதில் அதர்வா முரளி, மணிகண்டன், நிகிலா விமல், கௌதம் வாசுதேவ் மேனன், தில்னாஸ் இராணி, இளவரசு, டிடி என்கிற திவ்யதர்ஷினி, வடிவுக்கரசி, அருவி திருநாவுக்கரசு, மூணாறு ரமேஷ், சரத் ரவி, ரிஷிகாந்த், முரளி அப்பாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
எட்வின் சகாய் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த இணையத் தொடருக்கு தர்புகா சிவா இசையமைத்திருக்கிறார்.
எக்சன் திரில்லர் கலந்த இணையத் தொடரான இதனை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் எனும் டிஜிட்டல் தளத்திற்காக ஸ்கிரீன் சீன் என்டர்டெய்ன்மென்ட் எனும் நிறுவனம் தயாரித்திருக்கிறது.
இணைய தொடர் குறித்து இயக்குநர் பேசுகையில், “மத்தகம் என்பது யானையின் முன் நெற்றியை குறிக்கும் சொல். யானை தன் தும்பிக்கையுடன் இணைந்த மத்தகத்தை தற்காத்துக் கொள்ளவும்.. எதிரிகளை தாக்கவும்.. பயன்படுத்தும். இதனை மையப்படுத்தி ஒரு இரவில் நாயகனுக்கும்.. வில்லனுக்கும்.. இடையே நடைபெறும் ஆடு புலி ஆட்டமே இந்த இணையதா தொடர். முப்பது மணி நேரத்தில் நடக்கும் பரபரப்பான சம்பவங்களை உள்ளடக்கிய இந்த இணையத் தொடர் விரைவில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் எனும் டிஜிட்டல் தளத்தில் வெளியாகிறது.” என்றார்.