அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், யாழ்ப்பாணம் – வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் நேற்று கடற்படையினாரால் கைது செய்யப்பட்ட 18 இந்திய மீனவர்கள் எதிர்வரும் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில், குறித்த மீனவர்களை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரி, புதுச்சேரி முதலமைச்சர் என்.ரங்கசாமி, இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு நேற்று கடிதம் அனுப்பியுள்ளார்.
மீனவர்களை விடுவிப்பதற்காக இலங்கை அரசுடன் இணைந்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு, இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரிடம் புதுச்சேரி முதலமைச்சர் கோரியுள்ளார்.
இந்த விடயத்தில் இந்திய வெளிவிவகார அமைச்சு உடனடியாக தலையீடு செய்ய வேண்டும் என, இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் வி.வைத்தியலிங்கமும் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பான கோரிக்கை கடிதம் ஒன்றையும் இந்திய வெளிவிவகார அமைச்சரிடம் அவர் சமர்ப்பித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.