அத்துரலிய ரத்ன தேரர் தலைமறைவு – தேசிய பட்டியல் ஆசனத்திற்காக பௌத்தமதகுருவை கடத்திய குற்றச்சாட்டின் கீழ் தேடும் பொலிஸார் – கோட்டா – தேசபந்துவிற்கும் தொடர்பு!

0
6

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் தலைமறைவாகியுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஓபிபிபி கட்சியின் பொதுச்செயலாளர் வெதினிகம விமலதிஸ்ஸ தேரர் 2020 இல்  கடத்தப்பட்டமை தொடர்பிலான வழக்கில் அத்துரலிய ரத்ன தேரரை தேடி வரும் பொலிஸார் அவர் தலைமறைவாகியுள்ளார் என தெரிவித்துள்ளனர்.

அத்துரலிய ரத்ன தேரரின் ராஜகிரிய ஆலயம்,தியான நிலையங்கள் உட்பட பல இடங்களிற்கு அவரை தேடிச்சென்றதாக தெரிவித்துள்ள கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் அவரை எங்கும் கண்டுபிடிக்கமுடியவில்லை என குறிப்பிட்டுள்ளனர்.

அத்துரலிய ரத்ன தேரரை அவரது தொலைபேசி மூலம் தொடர்புகொள்ள முடியவில்லை என தெரிவித்துள்ள பொலிஸார் அவர் நாட்டிலிருந்து தப்பியோடுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவ்வேளை மேல்மாகாணத்திற்கான சிரேஸ்ட பிரதிபொலிஸ்மா அதிபராக விளங்கிய தேசபந்து தென்னக்கோன் ஆகியோருடன் தொடர்புபட்ட சம்பவம் தொடர்பான முறைப்பாட்டின் அடிப்படையிலேயே  அத்துரலிய ரத்னதேரரை தேடுவதாக தெரிவித்துள்ள பொலிஸார் இருவரையும் விசாரணை செய்யவுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

நாடாளுமன்றத்தில் தேசிய பட்டியல் ஆசனத்தை பெறுவதற்கான கையெழுத்தை பெறுவதற்கு அத்துரலிய ரத்ன தேரர் ஓபிபிபி கட்சியின் பொதுச்செயலாளர் வெதினிகம விமலதிஸ்ஸ கடத்தினார் என்ற  குற்றச்சாட்டு உள்ளதாக தெரிவித்துள்ள பொலிஸார் அந்த ஆவணத்தில் கையெழுத்திடாவிட்டால் தன்னை கொலை செய்யப்போவதாக வெதினிகம விமலதிஸ்ஸ தேரர் தெரிவித்தார் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.