சிங்கள மக்கள் ஏற்றுக்கொள்ளும் தீர்வே தமிழ் மக்களுக்கான தீர்வாக இருக்க முடியுமென்று, தேசிய மக்கள் சக்தியென்னும் பெயரில் இயங்கிவரும்
ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க கூறுகின்றார்.
ஆரம்பத்தில் 13வது திருத்தச்சட்டத்தை அமுல்படுத்துவதில் தங்களுக்கு பிரச்னையில்லையென்று கூறிய ஜே.வி.பியினர் தற்போது முழுமையாக அதற்கு மாறான நிலைப்பாட்டை வெளிப்படுத்துகின்றனர்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசியலமைப்பிலுள்ள 13ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தப் போவதாக அறிவித்ததை தொடர்ந்தே, 13ஆவது திருத்த விவகாரம் மீளவும் பேசுபொருளானது.
13ஆவது திருத்தத்ததை கொழுத்தி, பிக்குகள் எதிர்ப்பு வெளியிட்டிருந்தனர்.
மகாசங்கம் 13ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியிருந்தது.
இதனைத் தொடர்ந்தே ஜே.வி.பியும் குத்துக்கரணம் அடித்தது.
13ஆவது திருத்தத்ததை ஓர் இறுதியான தீர்வாக தமிழர்களும் முன்வைக்கவில்லை.
ஆனால் அதனை முழுமையாக அமுல்படுத்தும் முயற்சியை பெரும்பாலான தமிழ் கட்சிகள் ஆதரிக்கின்றன.
ஆனால் காலத்திற்கு காலம், இது பற்றி பேசினாலும், சிங்கள ஆட்சியாளர்கள் காத்திரமான நடவடிக்கைகள் எதனையும் முன்னெடுக்கவில்லை.
இவ்வாறானதொரு பின்னணியில்தான், ஒரு விபத்தாக, ஜனாதிபதியான, ரணில் விக்கிரமசிங்க, தேசிய இனப்பிரச்னைக்கான தீர்வாக, 13ஆவது
திருத்தச்சட்டத்தை அமுல்படுத்தப் போவதாக கூறியிருந்தார்.
அதனைத் தொடர்ந்து, தென்னிலங்கை கடும்போக்கு தரப்புக்கள் கொதிநிலையடைந்தன.
வீதிக்கு வந்தன.
இதனை எதிர்பார்த்துக் கூட, ரணில் விக்கிரமசிங்க இதனை கூறியிருக்கலாம்.
அரசியலமைப்பிலுள்ளவற்றையே அமுல்படுத்த முடியாத போது, அதற்கு மேல் எவ்வாறு பயணிக்க முடியும்? இவ்வாறானதொரு கேள்வியை வெளியுலகை நோக்கி ரணில் முன்வைக்கலாம் அல்லது ஏனையவர்கள் முன்வைக்கலாம்.
இந்த பின்புலத்தில், அநுரகுமார திஸாநாயக்கவின் கருத்தை நோக்கினால், அரசியலமைப்பில் இருப்பதையே அதிகமென்று கூறுகின்ற சூழலில்,
சிங்கள மக்கள் அதற்கு மேலான ஒரு தீர்வை தமிழ் மக்களுக்கு வழங்குவதற்கு முன்வருவார்களா? அது சாத்தியமான ஒன்றா? அவ்வாறானதொரு
தீர்வை வழங்க வேண்டுமென்று ஜே.வி.பி அல்லது தேசிய மக்கள் சக்தி, சிங்கள மக்களிடம் வலியுறுத்துமா? இதனை ஒரு பிரசாரமாக சிங்கள
மக்கள் மத்தியில் முன்னெடுக்குமா? இந்தக் கேள்விகளுக்கு பதிலளிக்கும் வல்லமை அநுரகுமார திஸாநாயக்கவிடம் இருக்கின்றதா? இருப்பதையே அதிகமென்று கூறுகின்ற சூழலில், புதிய அரசியல் யாப்பின் மூலம் தமிழ் மக்களுக்கு நியாயமானதொரு அரசியல் தீர்வை எவ்வாறு கொண்டுவர முடியும்? இருப்பதை அமுல்படுத்திக் கொண்டு, முன்னோக்கி பயணிப்போமென்று கூறினால் அதில் ஒரு பொருளுண்டு.
ஆனால் இங்கு பேசப்படும் விடயங்களோ, இருப்பதையும் இல்லாமாலாக்குவதற்கான தீய நோக்கம் கொண்டது.
13ஆவது திருத்தச்சட்டத்தை இல்லாமலாக்குவதன் மூலமாக, தமிழ் மக்களுக்கு இன்னொரு, சிறந்த அரசியல் தீர்வு வருமென்றால், அது வர
வேற்கப்பட வேண்டியது.
அதனைத்தான் தமிழர்களும் எதிர்பார்க்கின்றனர்.
ஆனால் அதற்கான வாய்ப்பு தென்னிலங்கையில் இல்லை – இவ்வாறானதொரு சூழலில், 13ஜயும் கைவிடுவதானது, தமிழர் தாங்களாகவே விரும்பி படுகுழியில் விழுவதற்கு ஒப்பானது.
இந்த விடயம் தமிழ் சூழலிருக்கும், தங்களை 24 கரட் தேசியவாதிகள் என்போருக்கும் கூட விளங்காத ஒன்றுதான்.
இன்றைய ஜே.வி.பி சில விடயங்களில் தன்னை மாற்றிக் கொண்டுள்ளது.
ஆனால் தமிழர் பிரச்னைக்கான தீர்வு விடயத்தில், தென்னிலங்கை கட்சிகளுக்கும் ஜே.விக்கும் அடிப்படையான வேறுபாடுகள் இல்லை.