சந்திரிகா குமாரதுங்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில் ஜே. வி. பி. தொடர்பில் ஒரு பிரசாரம் முன்னெடுக்கப்பட்டது. அதாவது, சிறீ லங்கா சுதந்திரக் கட்சி பிடிக்காவிட்டால் ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களியுங்கள் – ஆனால், ஒருபோதும் ஜே. வி. பிக்கு வாக்களித்து விடாதீர்கள். கொழும்பின் ஆளும் தரப்பு தங்களுக்குள் முரண்பட்டாலும்கூட – தங்களை வீழ்த்தும் மூன்றாவது சக்தியொன்று உருவாகிவிடக்கூடாது என்பதில் எப்போதும் கவனமாக இருந்து வந்திருக்கின்றது. அண்மையில்கூட, ஐக்கிய மக்கள் சக்தியின் முக்கியஸ்தர் ஒருவர் அவ்வாறு கூறியிருக்கின்றார். தாங்கள் இல்லாவிட்டால் ரணில் வெல்லட்டும் என்று அவர் கூறியிருக்கின்றார்.
கொழும்பின் அதிகாரபீடமானது மாறிமாறி ஒரு குறிப்பிட்ட அதிகார வர்க்கத்திடம்தான் இருந்து வந்திருக்கின்றது. இவ்வாறானதொரு பின்னணியில்தான் தேசிய மக்கள் சக்தியின் (ஜே. வி. பி.) வேட்பாளர் அநுரகுமார திஸநாயக்கவின் செல்வாக்கு அதிகரித்து வருவதான செய்திகள் வெளியாகி வருகின்றன. இதனை எவ்வாறு புரிந்து கொள்வது? உண்மையிலேயே அவர்களின் செல்வாக்கு அதிகரித்து வருகின்றதா அல்லது அவ்வாறானதொரு தோற்றத்தை ஏற்படுத்தி ஏனையவர்கள் ஒன்றிணைக்கப்படுகின்றனரா? ஏனெனில், அநுரகுமார திஸநாயக்க வெற்றி பெறுவதை ரணிலும் விரும்பப்போவதில்லை சஜித் பிரேமதாஸவும் விரும்பப்போவதில்லை. ஏனெனில், மூன்றாவது சக்தியொன்று அதிகாரத்தைக் கைப்பற்றுவதை எப்பாடுபட்டேனும் தடுக்க வேண்டும் என்னும் அரசியல் வகுப்பில்தான் இருவரும் கற்றிருக்கின்றனர்.
கொழும்பின் அதிகாரம் எப்போதும் தங்களின் வசம்தான் இருக்க வேண்டும் என்று ஒரு சிங்கள அதிகார வர்க்கம் செயல்பட்டு வருகின்றது. ராஜபக்ஷக்கள் எழுச்சியடைந்தபோது கொழும்பின் உயரடுக்கினரின் செல்வாக்கு வீழ்ச்சியுற்றது. ஆனால், ஜே. வி. பி. எழுச்சியுற்றால் அதிகாரத்தை கைப்பற்றினாலும் அது மிகவும் சிக்கலானதாக அமையுமென்றே அவர்கள் கணிப்பர். ஏனெ னில், அநுரகுமார திஸநாயக்கக்கள் ராஜபக்ஷக்கள் போன்றவர்கள் அல்லர். ராஜபக்ஷக்களிடம் சித்தாந்த பலம் இல்லை. அதனால், அவர்களிடம் அதிகாரம் தொடர்பான உறுதியான நிலைப்பாடு இல்லை.
ராஜபக்ஷக்களை பொறுத்தவரையில் அரசியல் அதிகாரம் என்பது வெறும் பணம் சம்பாதிக்கும் கருவி ஒன்றுதான். அத்துடன், குடும்ப செல்வாக்கை விரிவுபடுத்துவது. ஆனால், அநுர குமார திஸநாயக்கக்கள் இலக்கு வைக்கும் அதிகார அரசியல் முற்றிலும் வேறானது. அது மிகவும் தெளிவாகவும் – உறுதியாகவும் அதிகாரத்தை எவ்வாறு கையாள வேண்டும் என்னும் நிலைப்பாடு கொண்டது. இவ்வாறான பின்னணி கொண்ட ஜே. வி. பி. அதிகாரத்தைக் கைப்பற்றுவதை சிங்கள ஆளும் வர்க்கம் நிச்சயம் விரும்பப்போவதில்லை. ஆனால், மக்களிடம் ஒரு விழிப்பும் – எழுச்சியும் ஏற்பட்டுவிட்டால் அதன் பின்னர் எழும் அலையை எவராலும் கட்டுப்படுத்த முடியாது.