ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்க தலைமையில் அவர் உட்பட மூவரை அமைச்சர்களாகக் கொண்டு தற்போது பதவியில் இருப்பது ஓர் இடைக்கால அல்லது காபந்து அரசாங்கமே. இரு தசாப்தங்களுக்கு மேலாக பாராளுமன்ற உறுப்பினராக இருந்துவந்த போதிலும், சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் 2004 அரசாங்கத்தில் ஓர் அமைச்சராகப் பதவி வகித்தமையைத் தவிர ஆட்சி அனுபவம் எதுவும் இல்லாதவர் ஜனாதிபதி திஸநாயக்க. ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்று ஜனாதிபதியாகப் பதவியேற்று வெறுமனே ஒரு மாத காலம் மாத்திரமே கடந்த நிலையில் திஸநாயக்கவின் அரசாங்கத்தின் செயல்பாடுகளில் பிழை கண்டுபிடிப்பதில் எதிரணிக் கட்சிகள் குறிப்பாக அவரிடம் தோல்வி கண்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்கவும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸவும் தீவிரமாக இறங்கியிருக்கிறார்கள்.
திஸநாயக்கவைப் போன்று பதவிக்கு வந்த ஒரு மாத காலத்துக்குள் பெருமளவுக்கு எதிர்மறையான விமர்சனங்களுக்கு உள்ளான அனுபவம் வேறு எந்த முன்னாள் ஜனாதிபதிக்கும் இருந்ததில்லை. பொருட்களுக்கு மக்கள் நீண்ட வரிசைகளில் காத்து நிற்கும் யுகம் மீண்டும் விரைவில் தோன்றப் போகிறது, பொருளாதார நெருக்கடியை கையாள்வதில் தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் பாரதூரமான சவாலை எதிர்நோக்கப் போகிறது, மூன்று மாதங்களாவது திஸநாயக்கவின் அரசாங்கம் தாக்குப் பிடிக்கும் என்பது சந்தேகமே, இஸ்ரேலியர்களை இலக்கு வைத்து தாக்குதல் களை நடத்துவதற்கு தீட்டப்பட்டதாக சந்தேகிக்கப்படும் திட்டங்கள் காரணமாக வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகையில் ஏற்படப்போகும் வீழ்ச்சி – வெளிநாட்டு நாணயச் சம்பாத்தியத்தை கடுமையாகப் பாதிக்கப்போகிறது என்றெல்லாம் பலவாறாக பூச்சாண்டி காட்டும் வேலைகளில் எதிரணிக் கட்சிகள் இறங்கியிருக்கின்றன.
இன்னமும் பதினேழு நாட்களில் பாராளுமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. தன்னால் நாட்டு மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கும் ஊழலும் முறைகேடுகளும் இல்லாத நிர்வாகத்தை நடத்துவதற்கும் பலம்பொருந்திய அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கும் தேசிய மக்கள் சக்திக்கு பாராளுமன்றத் தேர்தலில் அமோக ஆதரவை வழங்குமாறு ஜனாதிபதி திஸநாயக்க வாக்காளர்களிடம் வேண்டுகோள் விடுத்து வருகிறார். ஆனால், பாராளுமன்றத் தேர்தலில் மக்களிடம் எதைக் கூறி வாக்குக் கேட்பது என்று தெரியாமல் தடுமாறிக் கொண்டிருக்கும் எதிரணித் தலைவர்களும் அவர்களைச் சார்ந்த அரசியல்வாதிகளும் திஸநாயக்கவின் அரசாங்கத்தின்மீது பிழைகண்டு பிடிப்பதைத் தவிர வேறு எதையும் செய்ய முடியாதவர்களாக இருக்கிறார்கள்.
தென்னிலங்கை நிலவரம் இவ்வாறு இருக்கையில், வடக்கு- கிழக்கில் தமிழ் அரசியல் கட்சிகளும் ஜனாதிபதியையும் தேசிய மக்கள் சக்தியையும் படுமோசமான இனவாத சக்திகளாக தமிழ் மக்கள் மத்தியில் பிரசாரம் செய்து கொண்டிருக்கின்றன. ஆனால், அந்தக் கட்சிகளின் பல தலைவர்கள் திஸநாயக்கவைச் சந்தித்து படங்களை எடுத்து அவற்றை ஊடகங்களில் வெளியிடுவதில் எந்த அசௌகரியத்தையும் அடையவில்லை. தமிழ்க் கட்சிகளை யும்விட தேசிய மக்கள் சக்திக்கு வடக்கு, கிழக்கில் கூடுதல் ஆசனங்கள் கிடைத்துவிடுமோ என்று தமிழ் அரசியல்வாதிகள் பயப்படுகிறார்கள். தங்களது இதுகாலவரையான அரசியலில் தமிழ் மக்கள் கடுமையான வெறுப்பு அடைந்திருக்கிறார்கள் என்பதை தமிழ் அரசியல்வாதிகள் நன்றாகவே விளங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
புதிய ஜனாதிபதி தனது நிலையை வலுப்படுத்தி அதிகாரத்தில் ஒழுங்காக அமருவதற்கு முன்னதாகவே அவருக்கு எதிராகத் தீவிரப்படுத்தப்படும் பிரசாரங்கள் சாமானியன் ஒருவன் ஆட்சியதிகாரத்துக்கு வந்திருப்பதை பழைய அரசியல் அதிகார வர்க்கத்தால் ஜீரணிக்க முடியவில்லை என்பதை பிரகாசமாக வெளிக்காட்டுகிறது. ஆட்சிமுறை அனுபவம் இல்லாதவர்கள் என்று திஸநாயக்கவையும் தேசிய மக்கள் சக்தி அரசியல்வாதிகளையும் இன்று காணும் விக்கிரமசிங்கவும் ஏனையவர்களும் பிரதேச சபை உறுப்பினராகக்கூட இருக்காத கோட்டாபயராஜபக்ஷ ஜனாதிபதியாக வந்தபோது ஆட்சிமுறை அனுபவத்தைப் பற்றி எதையும் பேசவில்லையே. அதுதான் வர்க்க நலன்களின் சங்கமம் எனப்படுவது. பாராளுமன்றத் தேர்தலுக்கு பிறகு தேசிய மக்கள் சக்தி உறுதியான ஓர் அரசாங்கத்தை அமைக்க அனுமதித்து திஸநாயக்கவின் தலைமையில் அது நாட்டை நிர்வகிக்க ஒரு குறிப்பிட்ட கால அவகாசம் வழங்குவதே உண்மையில் ஜனநாயக பண்பும் அரசியல் நாகரிகமுமாகும்.