அநுராதபுரம் வைத்தியர் விவகாரத்துடன் தொடர்புடைய சந்தேகநபரின் மூத்த சகோதரி உள்ளிட்ட இருவர் அநுராதபுரம் காவல்துறையினர் கைது செய்தனர். கல்னேவ பகுதியில் வைத்து நேற்றிரவு அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சம்பவத்தின் பிரதான சந்தேகநபரான முன்னாள் இராணுவ சிப்பாய் தலைமறைவாகுவதற்கு உதவி வழங்கிய குற்றச்சாட்டில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்படி, 37 வயதுடைய பெண்ணொருவரும் 27 வயதுடைய ஆண் ஒருவருமே கைதாகியுள்ளனர்.
இதேவேளை, அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பெண் வைத்தியர் விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட 34 வயதான முன்னாள் இராணுவ சிப்பாய் அநுராதபுரம் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் நேற்றிரவு அநுராதபுரம் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டதாக கல்னேவ காவல்நிலையத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.இதேவேளை, அநுராதபுரம் வைத்தியருக்கு நீதிக் கோரி நேற்று ஆரம்பிக்கப்பட்ட அடையாள பணிப்புறக்கணிப்பு இன்று காலை 8 மணியுடன் நிறைவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.