நுவரெலியா மாவட்டத்தில் சீரற்ற காலநிலை காரணமாக மூவர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் நுவரெலியா மாவட்ட முகாமையாளர் ரஞ்சித் அழகக்கோன் தெரிவித்துள்ளார்.
நுவரெலியா மாவட்டத்தில் 494 குடும்பங்களை சேர்ந்த ஆயிரத்து 853 பேர் வரை சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா அனர்த்த முகாமைத்துவ பிரிவு அறிவித்துள்ளது. இது தொடர்பாக நுவரெலியா அனர்த்த முகாமைத்துவ பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. நுவரெலியா மாவட்டத்தில் சீரரற்ற வானிலையால் ஒரு வீடு முற்றாக சேதமடைந்துள்ளது.
337 வீடுகள் பகுதி அளவில் பாதிக்கப்பட்டுள்ளன. இதுவரையில் 3 பேர் உயிரிழந்துள்ளதுடன் 3 பேர் காணாமல் போயுள்ளனர். காணாமல் போனவர்களை தேடும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 2 பாதுகாப்பு மையங்கள் செயற்பட்டு வருகின்றது. 5 குடும்பங்கள் பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இதில் 13 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இது தவிர பாதிக்கப்பட்டவர்கள் 389 குடும்பங்களை சேர்ந்த ஆயிரத்து 397 பேர் தங்களுடைய உறவினர்களின் வீடுகளிலும் வசித்து வருகின்றனர்.
இதே வேளை தொடர்ந்து கடுமையான காலநிலை நிலவி வருவதுடன் கடுமையான மழையும் தொடர்ந்து பெய்து வருகின்றது. நுவரெலியா மாவட்டத்தில் அம்பேகமுவ பகுதியே அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது. குறிப்பாக பல முக்கிய பாதைகள் தொடர்ச்சியாக மண் சரிவிற்கு உட்பட்டு வருவதால் அந்த பாதைகளை பாதை அபிவிருத்தி அதிகார சபை உள்ளுராட்சி மன்றங்கள் அனைத்தும் இணைந்த உடனுக்கு உடன் பாதைகளை ஒழங்கமைத்தாலும் போக்குவரத்து தடைபட்ட வண்ணமே உள்ளது. பாடசாலைகள் மூடப்பட்டிருந்தாலும் எதிர்வரும் க.பொ.த உயர்தர பரீட்சையை முன்னிட்டு ஒரு சில பாடசாலைகளில் பல சிரமங்களுக்கு மத்தியில் வகுப்புகளை முன்னெடுத்து வருகின்றனர். ஆசிரியர்களும் மாணவர்களும் பாடசாலைக்கு வந்து செல்வதில் பல்வேறு போக்குவரத்து சிரமங்களை எதிர்நோக்கிவருகின்றனர். அதே நேரம் நேற்று முன்தினம் கொத்மலை பூண்டுலோயா பகுதியில் அரச பேருந்த ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் பாதிக்கப்பட்ட 13 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்திற்கு உள்ளான பேருந்தில் இருந்து பாதிக்கப்பட்டவரகளை மீட்பதில் பாரிய சிக்கல் ஏற்பட்டது. இதற்கு முக்கிய காரணம் தொடர்ந்தும் காலநிலை மிகவும் மோசமடைந்துள்ளது. பல பிரதான பாதைகளில் இருபகுதிகளிலும் மண்சரிவு வீதிகள் தாழிறக்கம் மரம் முறிந்து விழுகின்ற சம்பவங்கள் என்பன இடம்பெற்று வருகின்றது. நீர் நிலைகளிலும் நீர் மட்டம் தொடர்ந்தும் அதிகரித்து வருகின்றது.இந்த நிலைமை தொடருமாக இருந்தால் அனர்த்தத்தால் பாதிக்கப்படுகின்றவர்களின் நிலைமை இன்னும் அதிகரிக்கலாம் என நுவரெலியா அனர்த்த முகாமைத்துவ முகாமையாளர் அழகக்கோன் தெரிவித்துள்ளார். ஆறுகள் குளங்களை அண்மித்துள்ளவர்கள் மிகவும் நிதானமாக இருக்குமாறும் சிறுவர்களின் பாதுககாப்பில் அதிக கவனம் செலுத்துமாறும் பாதைகளில் பயணிப்பவர்கள் நிதானமாக செயற்பட வேண்டும் எனவும் ஆறுகள் குளங்களை பார்வையிடுவதற்கு செல்வதை தவிர்த்துக் கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதோடு, அரசாங்க அதிகாரிகள் அல்லது இராணவத்தினர் தங்களுடைய பகுதிகளுக்கு விஜயம் செய்து அங்கிருந்த வெளியேறுமாறு உத்தரவிட்டால் அதனை கட்டாயமாக கடைபிடித்து அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மாவட்ட முகாமையாளர் ரஞ்சித் அழகக்கோன் கேட்டுக்கொண்டுள்ளார்.