இந்திய பிரதமர் நரேந்திர மோடி இரு நாள் பயணமாக, நாளை 4ஆம் திகதி, இலங்கை வரவுள்ளார். இதன்போது தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளையும் சந்திக்கவுள்ளார். ஒரு காலத்தில் இந்திய எதிர்ப்பிற்கு பிரபலமான ஜே.வி.பி. ஆட்சியில் இருக்கின்ற நிலையில், இந்திய பிரதமர் ஒருவர், இலங்கை வருவதானது, ஒரு வரலாற்று நிகழ்வாகும்.
இந்தப் பின்புலத்தில், தேசிய இனப்பிரச்னை தொடர்பில் மோடி என்ன கூறுவார் என்பது அனைவருமே எதிர்பார்க்கும் ஒரு விடயமாகும் – அவர் எதனையும் கூறாமலும் செல்லலாம் அல்லது வழமைபோல் இந்தியாவின் நிலைப்பாடான அரசியலமைப்பின் 13வது திருத்தச்சட்டம் தொடர்பில் குறிப்பிடலாம். ஆனால் அநுரகுமார திஸநாயக்கவின் புதுடில்லி விஜயத்தின் போது, அவர் 13ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் எதனையும் குறிப்பிட்டிருக்கவில்லை – அதற்கு மாறாக, அரசியலமைப்பை அமுல்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியிருந்தார்.
அதன் மூலம் மறைமுகமாக மாகாண சபை முறைமையை இயங்கு நிலையில் வைத்துக் கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியிருந்தார். இந்த நிலையில் அவரைச் சந்திக்கும் தமிழ் கட்சிகளின் பிரதி நிதிகள் மாகாண சபை முறைமையின் அவசியத்தையும். தேர்தல் நடத்தப்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்த வேண்டிய கடப்பாடுடையவர்கள். மாறாக சமஷ்டி பற்றிப் பேசினால் – அதனை தவறென்று மோடி கூறப்போவதில்லை ஆனால், தமிழ் கட்சிகளின் கருத்துக்களை செவிமடுத்துவிட்டு சாதாணரமாக சென்றுவிடுவார்.
ஆனால், தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகள் அரசியலமைப்பை முழுமையாக அமுல்படுத்த வேண்டிய அவசியத்தை வலியுறுத்தாது விட்டால், 13ஆவது திருத்தச்சட்டத்தை தட்டிக் கழிக்க வேண்டும் என்று நினைக்கும் ராஜபக்ஷக்களும் அவர்களது ஆதரவு சக்திகளுமே நன்மையடைவர். மோடியின் இலங்கை விஜயம் இடம்பெறவுள்ள நிலையில் அரசாங்கம் 13வது திருத்தச்சட்டம் தொடர்பில் பேசக் கூடாது என்று ராஜபக்சவின் பொதுஜன பெரமுனவின் செயலாளர் காரியவசம் தெரிவித்திருக்கின்றார்.
இதுதான் அரசாங்கத்திற்கும் தேவையானது. ஏனெனில் தென்னிலங்கையில் தேவையற்ற சங்கடங்கள் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக இப்போது இதனைப் பேசாமல் விடுவதுதான் சரியானது என்பதையே அரசாங்கமும் மறைமுகமாக சுட்டிக்காட்ட முற்படும். இந்த அடிப்படையில்தான், 13ஆவது திருத்தச்சட்டத்தை எதிர்ப்பதாகக் கூறிக்கொள்ளும் தமிழ் கட்சிகளின் தலைவர்கள் என்போர், மறை முகமாக தென்னிலங்கையின் அடிப்படைவாத சக்திகளை பலப்படுத்தி வருகின்றனர் என்பதே உண்மை.
கடந்த பதினைந்து வருடங்களில் தமிழ் கட்சிகள் அரசியல் தீர்வு விடயத்தில் ஒரு சிறிய முன்னேற்றத்தைக் கூட காண்பிக்கவில்லை – இனியும் அவர்களால் காண்பிக்க முடியாது. ஏனெனில், அதற்கான வெளியக ஆதரவு இல்லை. இந்த நிலையில் பிரதமர் மோடி அரசியலமைப்பை அமுல்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியிருக்கும் நிலையில், மாகாண சபை தேர்தலை நடத்த வேண்டியதன் அவசியத்தையும், மாகாண சபைகள் முழுமையான அதிகாரத்துடன் இயங்க வேண்டியதன் அவசியத்தையுமே, தமிழ் கட்சிகள் முன்னிலைப்படுத்த வேண்டும்.