அனைத்து இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் வலுசக்தி அமைச்சுக்கு முன்பாக ஆர்ப்பாட்டம்

0
117

ஐந்து லீற்றர் பெற்றோல் என்பது முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு போதுமானதல்ல என்றும் எனவே இவ்விடயத்தில் நியாயமான தீர்வு பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் வலுசக்தி அமைச்சுக்கு முன்பாக இன்று காலை உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்தது.

முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு பெற்றோல் கோட்டா வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அரசாங்கத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது பொலிஸார் ஆர்;ப்பாட்ட இடத்துக்கு வருகை தந்ததுடன் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

இதன்போது கருத்துரைத்த அனைத்து இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர

30 வருடங்களாக நான் முச்சக்கர வண்டி சாரதியாக பணியாற்றி வருகின்றேன். எனது முச்சக்கர வண்டிக்கு பெற்றோலை நிரப்புவேன். அதன் பின்பு பயணிகளை ஏற்றி செல்வேன். வரும் வருமானத்தில் வாழ்க்கையை கொண்டு செல்ல முடிந்தது.

ஆகக் குறைந்தது முச்சக்கர வண்டி தொடர்பிலான வழக்கு கூட இருந்ததில்லை. எமது வாகனங்களுக்கு ஒவ்வொரு நாளும் பெற்றோலை நிரப்பிக்கொள்ள கூடியதாக இருந்தது.

இன்று பணத்தை வழங்கிக்கூட பெற்றோலை பெற்றுக்கொள்ள முடியாத நிலைமையே காணப்படுகின்றது.

நடு வீதியில் நிற்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

எமது பிள்ளைகளது பணிகள், எமது பணிகளை செய்துகொள்ளக்கூட முடியாத நிலைமையே ஏற்பட்டுள்ளது.

எனவே உழைத்துக்கூட வாழ முடியாத இந்த அரசாங்கத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலேயே நாம் இந்த உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்தோம்