அனைவரும் இந்துவாக திரட்சிபெற வேண்டும்!

0
172

வெடுக்குநாறி மலையிலுள்ள சிவனாலய விவகாரத்தைத் தொடர்ந்து பல பக்கங்களிலும் கண்டனங்கள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன.
இவ்வாறான கண்டனங்கள் வழமையானவை.
இது போன்ற சம்பவங்கள் இடம்பெறும்போது, கண்டனங்களை முன்வைப்பதும் – பின்னர் சில நாட்கள் – வாரங்களுக்கு பின்பாக வழமைபோல் ஏனைய விடயங்களில் மூழ்கிப்போவதுமே பல வருடங்களாக இடம்பெற்றுவருகின்றன.
இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் இவ்வாறு கண்டனங்களிலும் ஆர்பாட்டங்களிலும் காலம் கடத்துவது? முதலாவது பிரச்சினை இது ஒரு மதம் தொடர்பானது. தமிழ்த் தேசியத்தின் அடிப்படையாக மதச்சார்பின்மை இருக்க வேண்டுமென்பது சிலரின் வாதமாக இருக்கின்றது.
அவர்களின் வாதத்தை ஏற்றுக்கொள்வதாயின், வெடுக்குநாறிமலை சிவனாலய விவகாரம் மட்டுமல்ல குருந்தூர் மலை விவகாரமும் அனைத்துமே தமிழ்த் தேசிய விவகாரமல்ல.
ஆனால், அரசியல்வாதிகளும் சிவில் சமூக அமைப்புகளும் அத்துடன், ஊடகங்களும் – இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறும்போது அதனை தமிழர்களுக்கு எதிரான விடயங்களாவே முன்வைக்கின்றன.
வடக்கு – கிழக்கைப் பொறுத்தவரையில் பௌத்த மயமாக்கம் என்பது அடிப்படையிலேயே இந்துக்களின் அடையாளமுள்ள இடங்களில்தான் நடைபெறுகின்றது.
அல்லது அவ்வாறான குற்றச்சாட்டுகள் அனைத்தையும் ஏதோவொரு வகையில் இந்துக்களின் கலாசார அடையாளமுள்ள இடங்களை அடிப்படையாகக் கொண்டுதான் இடம்பெறுகின்றன.
மன்னாரிலுள்ள மாதா சுரூபங்கள் உள்ள இடங்களில் அல்லது கிறிஸ்தவர்களின் வாழ்வியலோடு தொடர்புடைய இடங்களில் பௌத்த மயமாக்கல் என்னும் பிரச்னைகள் ஏற்படுவதில்லை.
கத்தோலிக்க தேவாலயங்கள் அமைந்துள்ள இடங்களில் புத்தர் சிலை நிறுவப்பட்டதாகவோ அல்லது பௌத்த மயமாக்கல் முயற்சிகள் இடம்பெறுகின்றன என்றோ எந்தவொரு குற்றச்சாட்டுக்களும் கத்தோலிக்க மதத் தலைமைகளால் முன்வைக்கப்படுவதில்லை.
இந்த நிலையில், பௌத்த மயமாக்கலின் இலக்காக இருப்பது இந்துக்களின் வாழ்வியலை அடையாளப்படுத்தும் இடங்கள் மட்டுமேயாகும்.
இதனை முதலில் தமிழ்த் தேசிய கட்சிகள் என்போர் தெளிவாகப் புரிந்துகொள்ளவேண்டும்.
எனவே, இதனை பிரத்தியேகமாக கையாளுவதற்கான பொறிமுறைகள் தொடர்பில் தமிழ் அரசியல்வாதிகள் கவனம்கொள்ளவேண்டும்.
தமிழ்த் தேசிய அரசியல் நோக்கில் இந்த விடயத்தை அணுகுவது அடிப்படையிலேயே தவறானது.
ஏனெனில், தமிழ்த் தேசியத்தை மதச்சார்பற்றதாக பேணிப்பாதுகாக்க வேண்டுமென்று எண்ணுபவர்களுக்கு, சிவலிங்க வழிபாட்டுக்குரிய இடம் தொடர்பில் அக்கறை எதற்கு? தமிழ்த் தேசியத்துக்கு மதமே இல்லை என்றால், அதன் பின்னர் பௌத்த – இந்து முரண்பாடுகளில் தமிழ்த் தேசியவாதிகள் ஏன் தலையீடு செய்யவேண்டும்? இல்லாவிட்டால், தமிழ்த் தேசியத்தையும் இந்து மதத்தையும் பிரித்துப்பார்க்க முடியாதென்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
மதில் மேல் பூனையாக இருக்கக்கூடாது.
இந்த விடயம் தொடர்பில் எமது பரிந்துரை – வடக்கு கிழக்கிலுள்ள அனைத்து தமிழ் கட்சிகளும் இந்த விடயத்தில் ஒன்றுபட்டு நிற்கவேண்டும்.
வடக்கு – கிழக்கிலுள்ள இந்து தமிழ் மக்களின் கலாசார வாழ்வியலை அடையாளப்படுத்தும் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் அனைத்தையும் பாதுகாக்கும் கடப்பாடு அனைத்து இந்துக்களுக்குமானது.
எனவே, இந்த விடயத்தில் அரசாங்க ஆதரவு தமிழர், தமிழ்த் தேசிய தமிழர்கள் மற்றும் தமிழ் தேசியத்துக்கு எதிரான தமிழர்கள் என்னும் பாகுபாடிருக்கக்கூடாது.
வடக்கு – கிழக்கிலுள்ள இந்துக்களின் தொல்பொருள் சான்றாதாரங்களை தனித்துவமாகப் பாதுகாப்பதற்கு இந்து தொல்பொருள் பிரிவொன்றை நிறுவவேண்டுமென்னும் கோரிக்கையை அனைத்து தமிழ் இந்து அரசியல் பிரதிநிதிகளும் ஓரணியாக முன்வைக்கவேண்டும்.
இதில் வடக்கு – கிழக்கு – மலையகம் அனைவரும் ஓரணியில் இந்துக்களாக நிமிரவேண்டும்.
அவ்வாறானதோர் அணுகுமுறையின் ஊடாக மட்டுமே, இந்த விடயத்தை எதிர்காலத்தில் கையாளமுடியும்.
அவ்வாறில்லாது, இந்துக்களின் கலாசார அடையாளங்கள், சான்றுகள் பிரச்சினைக்கு உள்ளாகும்போது, அதனை தமிழ்த் தேசியத்தின் பெயரால் கையாள முற்படுவது தவறானது.
ஏனெனில், இந்து விவகாரத்தை தமிழ்த் தேசியத்தின் அடிப்படையில் கையாளும்போது, அது சிங்கள – பௌத்தவாதிகளுக்கே சாதகமாகும்.
அவர்கள் இதனை இலகுவாக அரசியலாக்கி, தங்களின் காரியத்தை வெற்றிகொண்டுவிடுவார்கள்.
குருந்தூர் மலை விவகாரம் இதற்கு ஒரு நல்ல உதாரணம்.
குருந்தூர் மலை விவகாரத்தில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தலையிட்டு எதனை சாதிக்க முடிந்தது.
அதனை தடுத்துநிறுத்த முடிந்ததா? இல்லையே.
இந்துவாக அனைவரும் திரளுவதன் மூலம் மட்டுமே இந்த விவகாரத்தை கையாள முடியும்.