ரசிகர்கள் ஏற்றுக்கொண்டால் மட்டுமே ஒரு நடிகர் நீண்டநாள் நடிக்க முடியும் என நடிகர் அபிஷே க் பச்சன் கூறியுள்ளார்.
நடிகர் அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சன். கடந்த சில வருடங்களில் இவர் நடித்த படங்களில் இவரின் நடிப்புக்கு நல்ல வரவேற்பு இருந்தாலும் பாலிவுட்டில் பெரிதாக ஜொலிக்க முடியவில்லை. வாரிசு அரசியல் பற்றிய சூடான விவாதங்கள் பாலிவுட்டில் எழுந்திருக்கும் நிலையில், அதுபற்றி அபிஷேக் பச்சன் ஒரு பேட்டியில் பேசியுள்ளார்.
“அப்பா எனக்காக யாரிடமும் பேசியதில்லை. என்னை வைத்துப் படம் கூட தயாரித்ததில்லை. ஆனால், நான் அப்பாவை வைத்து ‘பா’ படத்தைத் தயாரித்தேன். இது ஒரு வியாபாரம் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். முதல் படத்துக்குப் பிறகு ரசிகர்களுக்கு உங்களைப் பிடிக்கவில்லையென்றால், அல்லது அந்தப் படம் ஓடவில்லையென்றால் உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கப் போவதில்லை. அதுதான் கசப்பான உண்மை.
எனது படங்கள் ஓடவில்லை என்றால் எனக்குத் தெரியும். நான் எந்தெந்தப் படங்களில் மாற்றப்பட்டிருக்கிறேன் என்று எனக்குத் தெரியும், நான் நடிக்கிறேன் என்பதால் அதற்கான முதலீடு செய்ய யாரும் இல்லாமல் எந்தெந்தப் படங்கள் எடுக்கப்படவில்லை என்று எனக்குத் தெரியும். ஆனால், மேலோட்டமாகப் பார்ப்பவர்கள், ‘ஆஹா, இதோ அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சன், பிறக்கும்போதே செல்வச் செழிப்போடு பிறந்தவர்’ என்பார்கள்” என்று அபிஷேக் பேசியுள்ளார்.
அபிஷேக் பச்சனின் அடுத்த திரைப்படம் ‘லூடோ’. இதை அனுராக் பாசு இயக்கியுள்ளார்.
அபிஷேக்கின் கனவுக் கதாபாத்திரம் என்ன என்று கேட்டபோது, ”நான் நடிகனாக மாறுவதற்கு முன் ஷாரூக்கான் என்னிடம் ஒன்று சொன்னார். ‘என்றும் நினைவில் கொள், நீ நடித்துக் கொண்டிருக்கும் கதாபாத்திரம்தான் உனக்கு மிகவும் பிடித்ததாக இருக்க வேண்டும். அப்படியில்லை என்றால், ஏன் அதில் நடிக்க வேண்டும்’ என்றார். அது 100% சரி” என்று அபிஷேக் தெரிவித்தார்.