அமெரிக்காவின் தலையீடு

0
262

தமிழர் பிரச்னையில் அமெரிக்கா பார்வையாளராக இருக்கக்கூடாதென்று சம்பந்தன் தெரிவித்திருக்கின்றார்.
அண்மையில், அமெரிக்க தூதுவர் ஜூலி சங் சம்பந்தனை சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.
அமெரிக்கா தொடர்பில் தமிழ் சூழலில் அவ்வப்போது பேசப்படுவதுண்டு.
அண்மையில், உலகத் தமிழர் பேரவையின் தலைமையில் புலம்பெயர் பிரதிநிதிகள் சிலர் வாஷிங்டனில் தெற்காசிய விவகாரங்களுக்கான இராஜதந்திரிகளை சந்தித்திருந்தனர்.
அமெரிக்கா தொடர்ந்தும் இலங்கையின் மனித உரிமைகள் விடயத்தில் அழுத்தங்களை பிரயோகிக்குமென்று வாக்குறுதியளித்ததாக சந்திப்பில் பங்குகொண்டவர்கள் கூறியிருந்தனர்.
இதேபோன்று, பாராளுமன்ற உறுப்பினர் ஏம். ஏ. சுமந்திரன் தலைமையிலான மூவர் அடங்கிய குழு ஒன்றும் அமெரிக்கா சென்றிருந்தது.
நாடு திரும்பிய சுமந்திரன் அமெரிக்கா கடுமையான சில நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாகக் கூறியிருந்தார்.
ஆனால், அவர் கூறியவாறு எதுவும் நடக்கவில்லை.
அமெரிக்கா இலங்கை விடயத்தில் பார்வையாளராகவும் இருக்கவில்லை பங்காளராகவும் இருக்கவில்லை.
ஓர் உலக சக்தியென்னும் வகையில் அமெரிக்காவின் நீண்டகால நலன்களின் அடிப்படையில் அமெரிக்கா அதன் நகர்வுகளை முன்னெடுத்து வருகின்றது.
அண்மையில், அமெரிக்காவுக்கும் – இலங்கைக்குமான இராஜதந்திர உறவுகளின் 75ஆவது ஆண்டு கொழும்பில் கொண்டாடப்பட்டது.
ஒரு நட்புநாடு என்னும் வகையில் இலங்கையின் நலன்களில் அமெரிக்கா அதன் எல்லைக்கு உட்பட்டு ஈடுபாடு காட்டிவருகின்றது.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தின்போது இலங்கை இராணுவத்துக்கு பயிற்சி மற்றும் இராணுவ தளபாட உதவிகளை அமெரிக்கா வழங்கி வந்திருக்கின்றது.
உலகளாவிய பயங்கரவாதத்தை தடுப்பதென்னும் அடிப்படையிலேயே அமெரிக்காவின் உதவிகள் அமைந்திருந்தன.
1997ஆம் ஆண்டு அமெரிக்கா விடுதலைப் புலிகள் அமைப்பை ஒரு பயங்கரவாத அமைப்பாக தடை செய்ததன் மூலம் இலங்கை அரசாங்கம் பெரியளவில் நன்மை பெற்றது.
யுத்தம் முடிவுற்றதன் பின்னணியில் – விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதி யுத்தத்தின்போதான மனித உரிமைகள் மீறல், யுத்தக் குற்றங்கள் தொடர்பில் பொறுப்புக் கூறுவதற்கான அழுத்தங்களை அமெரிக்கா பிரயோகித்து வருகின்றது.
இந்த பின்புலத்தில்தான் 2012இல் இலங்கையின் மீதான முதலாவது பொறுப்புக் கூறல் பிரேரணை நிறைவேற்றப்பட்டது.
அப்போதைய ஒபாமா நிர்வாகத்தின் முயற்சியாலேயே அந்தப் பிரேரணை நிறைவேற்றப்பட்டது.
அமெரிக்காவின் அணுகுமுறையை நோக்கினால் ஒரு விடயத்தை காணலாம்.
அதாவது, அமெரிக்காவின் அணுகுமுறை இலங்கையை மையப்படுத்தியதே தவிர தமிழ் மக்களை பிரத்தியேகமாகக் கொண்டதல்ல.
இலங்கையில் மனித உரிமைகளை பாதுகாத்தல், நல்லாட்சியை ஊக்குவித்தல் என்னும் அடிப்படையில்தான் அமெரிக்காவின் ஈடுபாடு அமைந்திருக்கின்றது.
இந்த நிலையில், அமெரிக்கா தமிழர் பிரச்னையில் பார்வையாளராக இருக்கக்கூடாது என்றால் – இந்தியா போன்று தமிழ் மக்களின் அரசியல் பிரச்னையில் அமெரிக்காவும் நேரடியாக தலையீடு செய்ய வேண்டும்.
தமிழர்களுக்காக பிரத்தியேகமாக அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும்.
ஆனால், உலகம் அதிகம் பிராந்தியமயப்பட்டுவரும் சூழலில் அவ்வாறான தலையீட்டுக்கான வாய்ப்பில்லை.
சம்பந்தன் இந்த விடயங்களை அறிந்து பேசுகின்றாரா அல்லது விடயங்களை அறியமுடியாத கையறுநிலையில் பேசுகின்றாரா? பொதுவாக தமிழ் அரசியல் தரப்புகள் தங்களின் கற்பனைகளையே இராஜதந்திரமாக முன்வைப்பதுண்டு.
அமரிக்கா தொடர்பில் தமிழ் அரசியல்வாதிகள் முன்வைக்கும் கருத்துகளே இதற்கு சிறந்த உதாரணமாகும்.
அமெரிக்கா போன்ற உலக சக்திகள் நீண்டகால அடிப்படையில் தான் விடயங்களைக் கையாளும்.
ஒரு நாட்டின் எண்ணிக்கையில் சிறுபான்மையான மக்கள் கூட்டத்தில் பலம்பொருந்திய சக்திகள் பந்தயம்கட்டாது.
பெரும்பான்மையை கையாளவே முடியாதவோர் இக்கட்டான சூழலில்தான் ஏனைய மக்கள் கூட்டங்கள்மீது அவர்கள் பார்வை படும்.
அமெரிக்காவை பொறுத்தவரையில் அவ்வாறான சூழல் இதுவரையில் இலங்கைத் தீவில் ஏற்படவில்லை.