அமெரிக்காவின் நிலைப்பாடு தெரிந்தது?

0
133

இலங்கை வந்துள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான கீழ்நிலை செயலர் விக்டோரியா நூலண்ட் நேற்றைய
தினம், தமிழ் அரசியல் பிரதிநிதிகளை சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார்.
இதன்போது அமெரிக்காவின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியிருக்கின்றார்.
அதாவது, ரணில் விக்கிரமசிங்கவுடன் பேசி விடயங்களை படிப்படியாக பெறுவதற்கு முயற்சி செய்யுங்கள்.
நாடு பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியிருக்கின்றது.
இந்த நெருக்கடி என்பது அனைவருக்குமான நெருக்கடியாகும்.
சர்வதேச நாணய நிதியத்தின் உதவி கிடைக்கும்.
அதனைத் தொடர்ந்து ஏனைய நாடுகளும் உதவிகளை வழங்கும்.
படிப்படியாக பிரச்னைகள் நீங்கும்.
எனவே, பிரச்னைகளை கையாள்வது தொடர்பில் ஒரு வழிவரைபடத்தை தயாரியுங்கள்.
அதன் அடிப்படையில் ரணில் விக்கிரமசிங்கவோடு பேசுங்கள்.
காணி விடுவிப்பு மற்றும் இதர விடயங்களை படிப்படியாக தீர்ப்பதற்கு முயற்சியுங்கள்.
மொத்தத்தில் ரணில் விக்கிரமசிங்கவோடு இணக்கமாக செயல்படுவதன் மூலம் பிரச்னைகளை தீர்க்க முயற்சியுங்கள்.
இப்போது அனைத்து விடயங்களையும் முதன்மைப்படுத்தினால் மீளவும் அடிப்படைவாத சக்திகள் தலையெடுப்பர்.
எனவே, அவசரப்படாமல் விடயங்களை கையாளுங்கள்.
இதுதான் விக்டோரியா சொல்லாமல் சொல்லியிருப்பது.
சில தினங்களுக்கு முன்னர், இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சு. ஜெயசங்கர் தமிழ்த் தேசிய கட்சிகள் அனைத்தையும் ஓரணியாக சந்தித்த
போதும், இவ்வாறானதொரு கருத்தையே வலியுறுத்தியிருந்தார்.
அவர், இந்தியாவின் தலையிடும் எல்லைக்குட்பட்ட 13ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவது பற்றியும் அதனடிப்படையில் பயணிக்குமாறும் வலியுறுத்தி
யிருந்தார்.
பிராந்திய சக்தியான இந்தியாவும் படிப்படியாகப் பயணிப்பது பற்றியே பேசுகின்றது.
உலகின் முதல்தர சக்தியாக நோக்கப்படும் அமெரிக்காவும் படிப்படியாகப் பயணிக்குமாறுதான் கூறகின்றது.
இந்த இரண்டு நாடுகள்தான் இலங்கை விவகாரங்களில் தலையீடு செய்யும் பிரதான சக்திகளாகும்.
மேற்குலக அழுத்தங்கள் அனைத்துமே அமெரிக்க எல்லைக்கு உட்பட்டவைதான்.
அமெரிக்கா இல்லையென்றால் மனித உரிமைகள் சார்ந்த உலக கரிசனையே இருக்காது.
மனித உரிமைகள் மீதான கரிசனை யென்பது அமெரிக்க வெளிவிவகார கொள்கையின் அங்கம்.
அதனடிப்படையில்தான் அமெரிக்கா தொடர்ந்தும் இலங்கையின் மனித உரிமை விவகாரம் தொடர்பில் அதன் கரிசனையை வெளிப்படுத்தி வருகின்றது.
அதேபோன்று, தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு விடயத்தை வெளிப்படையாக அங்கீகரிக்கும் ஒரேயொரு நாடு இந்தியா மட்டும்தான்.
அதன் எல்லையாக இருப்பது, இந்திய – இலங்கை ஒப்பந்தமும், அதன் குழந்தையான 13ஆவது திருத்தச்சட்டமும்தான்.
இவற்றை மீறி நாங்கள் எங்கு செல்லப் போகின்றோம்? எதனை அடையலாமென்று எண்ணுகின்றோம்? எதனையும் எண்ணலாம்.
ஆனால், அடைவது எப்படி? இந்தக் கேள்விகளுக்கான பதிலற்ற வெளியில்தான், இருப்பதைப் பயன்படுத்திக் கொண்டு, முன்னேறும் வழிமுறைகள் தொடர்பில்
நாம் சிந்திக்க வேண்டியிருக்கின்றது.
இவைகள் நமது விருப்பங்களல்ல.
ஆனால், இவற்றை நம்மால் தாண்டிச் செல்ல முடியாதென்பதே நமக்கு முன்னாலுள்ள யதார்த்தமாகும்.
இதனை ஆழமாக புரிந்து கொண்டிருப்பதன் விளைவாகவே ‘ஈழநாடு’ தொடர்ந்தும் சில விடயங்களை வலியுறுத்தி வந்திருக்கின்றது.
நாம் இதுவரையில் கூறிவந்ததே நடந்திருக்கின்றது.
எனவே, இப்போதுள்ள சூழலில் எது சாத்தியமோ, அதனை கையாளுவதே அரசியல் புத்திசாலித்தனமாகும்.
தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளும் தமிழ் புத்திஜீவிகளும் சிவில் சமூகம் என்போரும் புத்திசாலித்தனத்தனமான வழி முறைகள் தொடர்பில் சிந்திக்க வேண்டும்.
பேச்சுப் பல்லக்கு ஆனால், தம்பியோ பொடிநடையென்பது போல், கதைகளில் காலத்தை விரயம் செய்ய முயற்சிக்கக் கூடாது.
கடந்த பதின்மூன்று வருடகாலம் பல கதைகள் சொல்லப்பட்டிருக்கின்றன.
ஆனால், தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு விடயத்தில் ஓர் அங்குலம்கூட நம்மால் அசைய முடியவில்லையே – ஏன்? இந்தக் கேள்விக்கான பதிலிருந்து
சிந்திக்க முற்பட்டால், நமக்குக் கிடைக்கும் ஒரேயொரு நேர்மையான பதில் – இருப்பதை பயன்படுத்திக் கொண்டு முன்செல்வோம் என்பது மட்டுமே!
ஒருவேளை, படிப்படியாக செல்வதைக்கூட, தென்னிலங்கை நிராகரிக்குமாயின் அதன் பின்னர் நாம் பேசலாம்.
ஆனால், படிப்படியாக செல்வதில் சில வருடங்களை நாம் செலவிட வேண்டும்.