அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு! மூவர் பலி! ஜனாதிபதி பைடன் கண்டனம்

0
19

அமெரிக்காவின் விஸ்கான்ஸின் மாகாணத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்துக்கு ஜனாதிபதி பைடன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

விஸ்கான்ஸினில் உள்ள மேடிசன் நகரில் உள்ள பாடசாலைக்குள் நுழைந்த சிறுவன் ஒருவன் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினான். இதில் ஆசிரியர் ஒருவரும், சிறுவனின் சக மாணவர் ஒருவரும் உயிரிழந்தனர். 6 பேர் காயமடைந்தனர். துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட சிறுவனும் சம்பவ இடத்தில் சடலமாக மீட்கப்பட்டான்.

துப்பாக்கிச் சூடு சம்பவம் இடம்பெற்ற பாடசாலையில் 400 மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர். இந்த நிலையில் சிறுவன் ஒருவன் நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து மேடிசன் நகர பொலிஸ் அதிகாரி ஷான் பார்னஸ் கூறுகையில்,

“இந்தச் சம்பவத்தில் இருவர் கொல்லப்பட்டனர். சந்தேக நபரும் உயிரிழந்தார். இரண்டு மாணவர்களுக்கு உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய கடுமையான காயம் ஏற்பட்டுள்ளது. காயமடைந்தவர்களில் இருவர் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ளனர்” என்றார்.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்குக் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “நியூடவுன் முதல் உவால்டே வரை, பார்க்லேண்ட் முதல் மேடிசன் வரை நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் போதிய கவனம் பெறவில்லை.

நாம் நமது குழந்தைகளை துப்பாக்கிக் கலாசாரத்திலிருந்து பாதுகாக்க முடியாததை ஏற்றுக் கொள்ள முடியாதது. வகுப்பறையில் பாதுகாப்பாக உணர்வது குழந்தைகளின் உரிமை.

நம் குழந்தைகள் பாடசாலையில் வாசிப்பையும், எழுதுவதையும் கற்றுக் கொள்ள வேண்டுமே தவிர எப்படி துப்பாக்கிச் சூட்டிலிருந்து தற்காத்துக் கொள்வது என்றல்ல.

குழந்தைகளை மனரீதியாக முடக்கும், பெற்றோர்களை அச்சத்தில் ஆழ்த்தும், சமூகத்தில் பிளவை ஏற்படுத்தும் இத்தகைய வன்முறைகளை அனுமதிக்க முடியாது” என்று தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

அமெரிக்காவில் இந்த ஆண்டு மட்டும் 322 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பாடசாலையில் நிகழ்ந்துள்ளன. 1966 ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஒரே ஆண்டில் இத்தனை துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடந்தது இதுவே முதன்முறையாகும்.