அமெரிக்க உதவி நிறுவன விவகாரம்

0
81

அமெரிக்காவின் சர்வதேச உதவிகளுக்கான முகவர் அமைப்பான யு. எஸ். எய்ட் எனப்படும் நிறுவனத்தின் உலகளாவிய செயல்பாடுகளுக்கான நிதியை தற்காலிகமாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிறுத்தியிருக்கின்றார். இதனால் பல மூன்றாம் உலக நாடுகளின் அரசுசாரா நிறுவன செயல்பாடுகள் நிச்சயமற்ற நிலையை அடைந்திருக்கின்றன. இதில் இலங்கையும் ஒன்று.

கொழும்பை மையப்படுத்தி இயங்கிவரும் அனைத்து அரசுசாரா நிறுவனங்களுமே பெரும்பாலும் அமெரிக்க உதவி நிறுவனத்தின் நிதியைப் பெற்றுக்கொண்ட – பெற்றுவரும் நிறுவனங்கள்தான். இதில் ஒரு சில அமைப்புகள் அமெரிக்க உதவி நிறுவனத்தின் நிதியை தொடர்ச்சியாக பெறுபவர்கள். உதாரணமாக மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம், சமாதானப் பேரவை போன்ற நிறுவனங்கள் இதில் பிரதானமானவை. இதேபோன்று, வடக்கு – கிழக்கில் இயங்கி வரும் சிறிய அரசுசாரா நிறுவனங்களும் அமெரிக்க உதவி நிறுவனத்தின் நிதியில்லாவிட்டால் இயங்கமுடியாத நிலைமை ஏற்படும்.

ட்ரம்ப் நிர்வாகம் பல அதிரடியான உத்தரவுகளை பிறபித்து வருகின்றது. அதில் முதன்மையானது அமெரிக்க உதவி நிறுவனம் தொடர்பானது. இலங்கையில் ஊடகங்களின் ஆற்றலை மேம்ப டுத்தும் நோக்கில் பல மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிழிக்கப் பட்டிருப்பது தொடர்பிலும் ட்ரம்ப் நிர்வாகம் சுட்டிக்காட்டியிருக்கின்றது. ட்ரம்ப் நிர்வாகத்தின் பார்வையில் அமெரிக்க உதவி நிறுவனத்தின் நிதி பயனற்ற வகையில் செலவழிக்கப்படுகின்றது. அதனால் எதிர்பார்த்த பயன்கள் கிடைக்கவில்லை. இலங்கை விடயத்தை ஓர் உதாரணமாக எடுத்துக் கொண்டால் ட்ரம்ப் நிர்வாகத்தின் குற்றச்சாட்டில் பொருளிருப்பதை காணலாம்.

ஏனெனில் இனங்களுக்கிடையில் சாமானத்தை கட்டியெழுப்பப் போவதாகக் கூறியே பல மில்லியன்கள் செலவழிக்கப்படுகின்றன. ஆனால், யுத்தம் முடிவடைந்து பதினைந்து வருடங்கள் கடந்துவிட்ட நிலையில்கூட, ஆகக் குறைந்தது அரசமைப்பிலுள்ள விடயங்களைக் கூட அரசாங்கங்கள் அமுல்படுத்த முயற்சிக்கவில்லை. அவற்றை புறம்தள்ளியே செயல்பட்டிருக்கின்றன. இந்த அடிப்படையில் நோக்கினால் இலங்கையில் சமாதானம் மற்றும் நல்லிணக்கம் என்னுமடிப்படையில் செலவழிக்கப்படும் அமெரிக்க உதவி நிறுவனத்தின் அரசுசாரா நிறுவன நிதிகள் தூர நோக்கோடு செவழிக்கப்படவில்லை.

அதேபோன்று அவ்வப்போது உல்லாச விடுதிகளில் ஒன்றுகூடி சமஷ்டி தொடர்பிலும் புதிய அரசியல் யாப்பு தொடர்பிலும் உரையாடப்படுகின்றது. ஆனால், அரசியல் தீர்வு விடயத்தில் ஓர் அடிகூட முன்னோக்கி பயணிக்க முடியவில்லை. இதிலுள்ள முரண்பாடான விடயம் என்னவென்றால், ஒருபுறம் சமாதானம் பற்றி பேசுவதற்காகவும் அரசுசாரா நிறுவன நிதிகள் பயன்படுத்தப்படுகின்றன – மறுபுறம், இலங்கையின் சுதந்திர தினத்தின்போது, கறுப்பு கொடி காட்டுவதற்கும் அரசுசாரா நிறுவனத்தின் நிதிகள் பயன்படுத்தப்படுகின்றன.

இந்த விடயங்கள் தொடர்பில் அமெரிக்க உதவி நிறுவனத்தின் இலங்கைத் திட்டங்களுக்கான உயர் அதிகாரிகளிடம் போதிய மதிப்பீடுகள் இருந்ததா என்பதிலும் தெளிவில்லை. இதேவேளை தங்களின் திட்டங்களை வழிநடத்துவதற்காக நியமிக்கப்பட்ட உள்ளூர் பணியாளர்களின் ஆற்றல் மற்றும் அரசியல் மதிப்பீடுகள் தொடர்பிலும் அமெரிக்க நிறுவன உயர் அதிகாரிகளிடம் போதிய மதிப்பீடு இருந்ததா என்பதிலும் தெளிவில்லை. இவ்வாறானதொரு பின்புலத்தில் அமெரிக்க உதவி நிறுவனம் எதிர்காலத்திலாவது இந்த விடயங்களை கருத்தில் கொண்டால், நிதி சரியான திட்டங்களுக்கு சரியான அரசுசாரா நிறுவனங்களால் பயன்படுத்தப்படும் சூழல் உருவாகலாம்.