
ரஷ்ய – உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவருவது தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மற்றும் ரஷ்யஜனாதிபதி புடினுக்குமிடையில் தொலைபேசியில் சுமார் 2 மணித்தியாலத்திற்கும் மேலாக உரையாடல் இடம்பெற்றுள்ளது.
இந்த உரையாடலில் ரஷ்ய-உக்ரைன் இரு நாடுகளும் பரஸ்பரம் எதிர்சக்திகளின் கட்டமைப்புக்கள் மீது தாக்குதல் நடத்துவதை 30 நாட்களுக்குத் தவிர்க்க அமெரிக்க ஜனாதிபதி வலியுறுத்தினார்.இதையேற்ற ரஷ்ய ஜனாதிபதி புடின், இது தொடர்பாக ரஷ்ய இராணுவத்துக்கு ஒரு உத்தரவையும் பிறப்பித்துள்ளார்.
உக்ரைனில் அணு உலை மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக உக்ரைன்ஜனாதிபதி ஸெலன்ஸ்கி குற்றஞ்சாட்டி இருந்த நிலையில், எரிசக்தி கட்டமைப்புகள் மீதான தாக்குதல்களை தவிர்க்க ஒப்புக் கொண்டுள்ளார் ரஷ்ய ஜனாதிபதி புடின்.
இதேவேளை மனித இழப்புக்களைத் தவிர்க்கவும், போரை முடிவுக்குக் கொண்டுவரவும் அமெரிக்காவின் உதவிகளுக்காக ட்ரம்பிற்கு ரஷ்ய ஜனாதிபதி புடின் நன்றி தெரிவித்துள்ளார். மேலும், போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான வழிகளை ஆராய அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரத்தில் நிலையான மற்றும் நிரந்தரத் தீர்வுகாண வேண்டும் எனவும், அமைதியை ஏற்படுத்தும் விதமாக எடுக்கப்படும் முயற்சிகளில் ரஷ்யாவின் பாதுகாப்பையும் கருத்திற் கொள்ள வேண்டும் எனவும் ட்ரம்ப் உடனான உரையாடலில் புடின் வலியுறுத்தியுள்ளார்.