அமெரிக்காவின் வாக்காளர்கள் தங்களது அடுத்த அதிபரைத் தேர்வு செய்வதற்காக எதிர்வரும் நவம்பர் 5-ஆம் தேதி வாக்களிக்க உள்ளனர்.
இந்தத் தேர்தல், ஆரம்பத்தில் 2020-ஆம் ஆண்டின் மறு பந்தயமாகவே கருதப்பட்டது. ஆனால் கடந்த ஜூலை மாதம் அதிபர் ஜோ பைடன் விலகி, தனது இடத்தில் துணை அதிபர் கமலா ஹாரிஸ் போட்டியிடுவதற்குத் தனது ஆதரவை உறுதி செய்தபிறகு எல்லாமே மாறிப்போனது.
இப்போதிருக்கும் மிகப்பெரிய கேள்வி என்னவென்றால், இந்தத் தேர்தல் முடிவு என்னவாக இருக்கும்? டொனால்ட் டிரம்ப் இரண்டாவது முறையாக அதிபராக பதவியேற்பாரா? அமெரிக்கா தனது முதல் பெண் அதிபரைப் பெறப் போகிறதா?
தேர்தல் நாள் நெருங்கநெருங்க, நாங்கள் கருத்துக்கணிப்புகளை உன்னிப்பாகக் கவனிப்போம். அதிபர் வேட்பாளர்களின் நேருக்கு நேர் விவாதம், அதிபர் மாளிகைக்கான பந்தயத்தின் மீது என்ன தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது என்பதைக் கூர்ந்து கண்காணிக்க உள்ளோம்.
பைடன் அதிபர் தேர்தலில் இருந்து விலக முடிவு செய்வதற்குச் சில மாதங்களுக்கு முன்பிருந்தே அவர் டொனால்ட் டிரம்பை விட பின்தங்கி இருப்பதாக கருத்துக்கணிப்புகள் காட்டின. அது ஒரு அவதானிப்பு மட்டுமே என்றாலும், கமலா ஹாரிஸின் செயல்பாடுகளும் இதைவிட அவ்வளவுச் சிறப்பாக இருந்திருக்காது என்று பல கருத்துக்கணிப்புகள் தெரிவித்தன.
ஆனால், கமலா ஹாரிஸ் தனது பிரசாரத்தைத் தொடங்கிய பிறகு போட்டி விறுவிறுப்பாக மாறியது. தேசியக் கருத்துக்கணிப்புகளின் சராசரியில் அவர் தனது போட்டியாளரை விடச் ’சிறிய’ முன்னிலையைப் பெற்றார். அவர் அதைத் தொடர்ந்து தக்கவைத்து வருகிறார். இரண்டு வேட்பாளர்களின் சமீபத்திய தேசியக் கருத்துகணிப்புச் சராசரிகள் கீழே காட்டப்பட்டுள்ளன. புள்ளிகள், அருகிலுள்ள முழு எண்ணுக்குத் திருத்தப்பட்டுள்ளன.

கருத்துக்கணிப்பு டிராக்கர் விளக்கப்படத்தில், கமலா ஹாரிஸ் பந்தயத்தில் இணைந்ததிலிருந்து இந்தச் சராசரிகள் எவ்வாறு மாறியுள்ளன என்பதை ’டிரெண்ட் கோடுகள்’ காட்டுகின்றன. தனிப்பட்டக் கருத்துக்கணிப்பு முடிவுகளின் பரவலை ‘புள்ளிகள்’ காட்டுகின்றன.
சிகாகோவில் நடந்த தனது கட்சியின் நான்கு நாள் மாநாட்டின் போது ஹாரிஸின் ஆதரவு 47%-ஐ எட்டியது. மாநாட்டின் இறுதிநாளான ஆகஸ்ட் 22-ஆம் தேதி, எல்லா அமெரிக்கர்களுக்கும் வருங்காலத்திற்கான ஒரு ‘புதிய வழியை’ அளிப்பதற்ன உறுதிமொழியுடன் அவர் தனது உரையை நிறைவு செய்தார். அதன்பிறகு அவரது சராசரியில் பெரிய மாற்றம் இல்லை.
டிரம்பின் சராசரியும் 44%-இல் ஓரளவு நிலையாகவே உள்ளது. சுயேச்சையாக போட்டியிட இருந்த ராபர்ட் எஃப் கென்னடி ஆகஸ்ட் 23-ஆம் தேதி போட்டியில் இருந்து விலகி டிரம்புக்குத் தனது ஆதரவைத் தெரிவித்த போதிலும் டிரம்பின் சராசரியில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏதும் ஏற்படவில்லை.
