இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங், இலங்கை தற்போதைய நெருக்கடியிலிருந்து மீளுமென்று நம்பிக்கை தெரிவித்திருக்கின்றார் அதேவேளை, இலங்கை அரசாங்கம் வெகுசன கவர்ச்சிக்கு மாற்றான புதிய விடயங்களை செய்யத் தயங்கக் கூடாதென்றும் தெரிவித்திருக்கின்றார்.
அதாவது, வழமையான நடவடிக்கைகளுக்குமாறாக, நாட்டின் மீட்சிக்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசாங்கம் தயங்கக்கூடாதென்று குறிப்பிட்டிருக்கின்றார்.
2005இல் அப்போது ஆட்சியிலிருந்த ஜோர்ஜ் டபிள்யூ புஷ் தலைமையிலான, அமெரிக்க குடியரசு கட்சி நிர்வாகம், ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தை அதிகாரத்துக்குக் கொண்டுவருவதில் அதிக ஆர்வத்தை வெளிப்படுத்தியிருந்தது.
அப்போது, அமெரிக்காவின் உதவி இராஜாங்க செயலராக இருந்த ரிச்சர்ட் ஆமிட்ரேஜ் இது தொடர்பில் பிரத்தியேக ஈடுபாட்டைக் காண்பித்திருந்தார்.
ரிச்சர்ட் ஆமிட்ரேஜ் அப்போது ‘இலங்கை அலுவலகர்’ என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள வட்டாரங்களில் வர்ணிக்கப்படுமளவுக்கு, இலங்கை விடயங்களில் அதிக ஆர்வத்தைக் காண்பித்திருந்தார்.
ஆனால், தமிழ் மக்களின் தேர்தல் பகிஷ்கரிப்பால் நிலைமைகள் தலைகீழாயின. மகிந்த ராஜபக்ஷ சொற்பளவான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.
விடுதலைப் புலிகள் தொடர்பில் மேற்குலகம் கடும் அதிருப்திக்கு உள்ளானது.
2009இல் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதைத் தொடர்ந்து மகிந்த ராஜபக்ஷ, தென்னிலங்கையின் வெகுசன கவர்ச்சிமிக்க தலைவரானார்.
விடுதலைப் புலிகளை யுத்தத்தில் தோற்கடித்தவர்கள் என்னும் புகழுடன் சிங்கள தேசியவாதம் எழுச்சியுற்றது. அந்த எழுச்சியின் நாயகனாக மகிந்த ராஜபக்ஷ விளங்கினார்.
இவ்வாறானதொரு பின்னணியில்தான், 2015இல் பரந்த கூட்டணி வேலைத்திட்டம் ஒன்றின் ஊடாக, மகிந்த ராஜபக்ஷ தோற்கடிக்கப்பட்டார்.
இதன் பின்னால் இந்திய மற்றும் அமெரிக்க சதியிருந்ததாகவே மகிந்த ராஜபக்ஷ பிரசாரம் செய்தார்.
2015 ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து, ரணில் விக்கிரமசிங்க மீளவும் தென்னிலங்கை அரசியலில் அதிகாரமுள்ளவராக வெளியில் வந்தார்.
ஆனாலும் ரணில் – மைத்திரி மோதல், ஈஸ்டர் குண்டு தாக்குதல் ஆகியவற்றால் மீளவும் ரணில் விக்கிரமசிங்க பின் வரிசைக்கு செல்ல நேர்ந்தது.
சஜித் பிரேமதாஸவின் உடைவைத் தொடர்ந்து, ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அதலபாதாளத்துக்கு சென்றது.
2020 பாராளுமன்ற தேர்தலில் ஒரு தேசிய பட்டியல் ஆசனத்துடன் ரணிலின் அரசியல் முடங்கிப் போனது. ரணிலின் அரசியல் வாழ்வு அஸ்தமனமாகிவிட்டதாக அனைவருமே நம்பினர்.
ஆனாலும் எவரும் எதிர்பாராத வகையில் பொருளாதார நெருக்கடியும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட அரசியல் நெருக்கடியும் ரணில் விக்கிரமசிங்கவை மீளவும், தென்னிலங்கையின் அரசியல் ஆட்டத்தில் தவிர்க்க முடியாத வராக்கியிருக்கின்றன.
இவ்வாறானதொரு பின்னணியில்தான், ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் தொடர்பில் அமெரிக்கத் தூதுவர் நம்பிக்கை வெளியிட்டு வருகின்றார்.
2005இல் குடியரசு கட்சி நிர்வாகம் காண்பித்தது போன்றதோர் ஆர்வத்தை தற்போதைய ஜனநாயக கட்சி நிர்வாகம் காண்பிக்குமா என்னும் கேள்விக்கு – ஆம், என்று பதிலளிக்க முடியாது.
அதேவேளை, இல்லையென்றும் பதிலளித்துவிட முடியாது.
ஏனெனில், அமெரிக்காவின் உலகளாவிய அணுகுமுறையென்பது, ஜனநாயக மற்றும் குடியரசு கட்சிகளின் ஆர்வத்துக்குள் அடங்கும் ஒன்றல்ல.
அமெரிக்காவில் கட்சிகள் என்பவை வெறும் கருவிகள் மட்டும்தான்.
எனவே, கிடைத்திருக்கும் சந்தர்ப்பத்தை ரணில் விக்கிரமசிங்க எவ்வாறு பயன்படுத்திக் கொள்வார் என்பதில்தான் அவரின் அரசியல் நகர்வுகள் மட்டுமல்ல – அவரில் முதலிடலாமாவென எண்ணிக் கொண்டிருப்பவர்களின் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகளும் தங்கியிருக்கின்றன.