இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தமிழ் தேசிய கட்சிகளின் தலைவர்களை சில தினங்களுக்கு முன்னர் சந்தித்திருந்தார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க புதுடில்லிக்கு செல்வதற்கு முன்னர் இந்த சந்தி;ப்பு இடம்பெற்றிருந்தது.
இதன்போது, ஒரு கட்டத்தில் அனைத்துக்கும் சர்வதேசத்திடம் தீர்வை எதிர்பார்க்கக் கூடாதென்று குறிப்பிட்டிருக்கின்றார்.
இந்த சந்திப்பு இடம்பெறுவதற்கு முன்னர் அமெரிக்க தூதுவர் சம்பந்தனை சந்தித்திருந்தார்.
இதன்போது, அமெரிக்கா பார்வையாளராக இருக்கக்கூடாது – பங்காளராக வேண்டுமென்று சம்பந்தன் கூறினாரென செய்திகள் வெளியாகியிருந்தன.
சம்பந்தனின் கருத்துக்கு கட்சித் தலைவர்களுடனான சந்திப்பின்போது தூதுவர் பதிலளித்திருக்கின்றார்.
அமெரிக்கத் தூதுவர் சரியாகவே கூறியிருக்கின்றார்.
ஏனெனில், அமெரிக்காவின் உலகளாவிய நலன்களை புரிந்து கொள்ளாமல் அல்லது புரிந்துகொள்ளத் தெரியாமல் கருத்துக்களை முன்வைக்கும்போது இப்படித்தான் அவர்கள் பதிலளிக்க முடியும்.
தமிழ்ச் சூழலில், அமெரிக்கா தொடர்பில் மிகைப்படுத்தப்பட்ட கருத்துக்களே முன்வைக்கப்பட்டிருக்கின்றன.
இதில், அரசியல்வாதிகளுக்கும் பங்குண்டு, கருத்துருவாக்கிகளுக்கும் பங்குண்டு.
2021இல் சுமந்திரன் தலைமையிலான குழுவொன்று வாஷிங்டன் சென்றிருந்தது.
நாடு திரும்பிய சுமந்திரன், அமெரிக்கா கடும் நிலைப்பாட்டை எடுக்கவுள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.
ஆனால், அவ்வாறான எந்தவொரு நகர்வும் அமெரிக்காவின் பக்கத்திலிருந்து நிகழவில்லை.
இன்றுவரையில் அதற்கான அறிகுறிகள்கூடத் தென்படவில்லை.
இவ்வாறானதொரு சூழலில்தான், அமெரிக்க தூதுவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டிருக்கின்றார்.
சர்வதேச அரசியலை நமது கற்பனைகளின் வழியாகப் பார்க்கக் கூடாது.
அவ்வாறு நோக்கினால் இறுதியில் ஏமாந்து போகவே நேரிடும்.
அதுதான் தற்போது நிகழ்ந்திருக்கின்றது.
‘ஈழநாடு’ சர்வதேச அரசியல் நகர்வுகளிலுள்ள உண்மைகளை தொடர்ந்தும் மக்களுக்கு எடுத்துரைத்திருக்கின்றது.
அந்த விடயத்தில் நாம் ஒரு முன்னோடியாக இருந்திருக்கின்றோம்.
அமெரிக்காவின் அணுகுமுறை உலகளாவியது. இது தொடர்பில் முன்னரும் அறிவுறுத்தியிருக்கின்றோம்.
அமெரிக்காவின் இலங்கை மீதான மென்மையான அழுத்தங்களை இந்தப் பின்புலத்திலிருந்துதான் நோக்க வேண்டும்.
இவ்வாறான அழுத்தங்கள் எவையும் இலங்கையை தனிமைப்படுத்தும் நோக்கில் செய்யப்படவில்லை.
மாறாக, இலங்கையுடன் ஒத்துழைத்து மாற்றங்களை ஏற்படுத்தும் நோக்கம் கொண்டது.
இந்த அடிப்படையில்தான், 2012இலிருந்து அமெரிக்கா பொறுப்புக் கூறலை வலியுறுத்தி வருகின்றது.
ஆனால், இன்றுவரையில் பெரியளவில் முன்னேற்றங்கள் ஏற்படவில்லை.
இது அனைவருக்கும் தெரியும்.
ஆனாலும் அவர்களது அணுகுமுறை முன்னரைப் போல்தான் இருக்கும்.
ஏனெனில், இலங்கையை தனிமைப்படுத்தும் நோக்கம் எவருக்குமில்லை.
எனவே, இலங்கை ஒத்துழைக்காமல் இலங்கைக்குள், முன்னேற்றங்களை காண முடியாது.
ஆனாலும் இவ்வாறான அழுத்தங்கள் சில விடயங்கள் தொடர்பில் சிந்திக்க வேண்டிய நிலைமையை இலங்கைக்கு ஏற்படுத்தியிருக்கின்றது.
இதனை நாம் மறுக்க முடியாது.
ஆனால், அரசியல் தீர்வு விடயத்தில் இவ்வாறான அழுதங்களால் தாக்கத்தை ஏற்படுத்த முடியாது.
ஏனெனில், இப்படியானதோர் அரசியல் தீர்வுதான், இலங்கைக்கு பொருத்தமானதென்று அமெரிக்கா ஒருபோதும் வலியுறுத்தாது.
அவ்வாறான அணுகுமுறை அமெரிக்க வெளிவிவகாரக் கொள்கையில் இல்லை.
மேலும் இந்தியாவின் அயல் நாடு ஒன்றின் மீது அவ்வாறான அழுத்தங்கள் எதனையும் பிரயோகிக்கவும் முடியாது.
இதனைப் புரிந்துகொண்டுதான் அமெரிக்காவை அணுக வேண்டும்.