அமெரிக்க நிறுவனங்களில் பணியாற்றும் சுமார் 3 இலட்சம் இந்திய மாணவ, மாணவியரை வெளியேற்ற அமெரிக்க அரசு திட்டமிட்டு உள்ளது. இதற்காக அமெரிக்க பாராளுமன்றத்தில் புதிய மசோதா தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.
அமெரிக்காவில் சுமார் 11 இலட்சம் வெளிநாட்டு மாணவ, மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர். இதில் 3.31 இலட்சம் பேர் இந்திய மாணவ, மாணவியர் ஆவர். சீனா,தென்கொரியா , கனடா, வியட்நாம், தாய்வான், சவுதி அரேபியா, பிரேசில், மெக்ஸிகோ ஆகிய நாடுகளைச் சேர்ந்த மாணவர்களும் அமெரிக்காவில் கல்வி கற்கின்றனர்.
அமெரிக்க கல்வி நிறுவனங்களில் சேர அந்த நாட்டு அரசு சார்பில் எப் 1 விசா வழங்கப்படுகிறது. இந்த விசாவை பெற்று அமெரிக்க கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவ, மாணவியர், விருப்ப பயிற்சி திட்டத்தில் இணைந்து அமெரிக்காவில் பணியாற்ற முடியும்.
விருப்ப பயிற்சி திட்டத்தின் மூலம் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த இலட்சக்கணக்கான மாணவ, மாணவியர் அமெரிக்க நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர்.
இந்த சூழலில் விருப்ப பயிற்சி திட்டத்தை இரத்துச் செய்யும் வகையில் அமெரிக்க பாராளுமன்றத்தில் புதிய மசோதா தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது. இதற்கு ‘நேர்மையான உயர் திறன் அமெரிக்க சட்டம் 2025’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
தற்போது அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள புதிய மசோதாவால் விருப்ப பயிற்சி திட்டம் முழுமையாக இரத்துச் செய்யப்படும். அதாவது எந்தவொரு அமெரிக்க நிறுவனமும் வெளிநாட்டு மாணவர்களை பணியில் அமர்த்த முடியாது.
அமெரிக்க மக்களின் வேலைவாய்ப்பை, வெளிநாட்டினர் பறிப்பதாக டொனால்ட் ட்ரம்ப் கருதுகிறார். இதன்காரணமாக புதிய மசோதா கொண்டு வரப்பட்டு உள்ளது. இந்தியாவை சேர்ந்த சுமார் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவி, மாணவியர் அமெரிக்காவில் கல்வி பயின்று வருகின்றனர். அவர்கள் அனைவரும் பாதிக்கப்படுவார்கள்.
விருப்ப பயிற்சி திட்டத்தில் அமெரிக்க நிறுவனங்களில் சுமார் 3 இலட்சத்துக்கும் மேற்பட்ட இந்திய மாணவ, மாணவியர் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் வலுக்கட்டாயமாக அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்பட வாய்ப்பிருக்கிறது. இவ்வாறு இந்திய மாணவ, மாணவியர் தெரிவித்தனர்.
இதுகுறித்து அமெரிக்க வெள்ளை மாளிகை வட்டாரங்கள் கூறியதாவது:
விருப்ப பயிற்சி திட்டத்துக்காக அமெரிக்க அரசு சார்பில் பல்வேறு நிறுவனங்களுக்கு மானிய உதவி வழங்கப்படுகிறது. இதன்படி ஓராண்டுக்கு 4 பில்லியன் டொலர் வரை மானியத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இது அமெரிக்க மக்களின் வரிப்பணம். இதை வெளிநாட்டினருக்காக செலவிட முடியாது.
விருப்ப பயிற்சி திட்டத்தால் வெளிநாட்டினருக்கே வேலைவாய்ப்புகள் கிடைக்கின்றன. அமெரிக்க இளைஞர்கள் வேலைவாய்ப்பு இன்றி பரிதவிக்கின்றனர். இந்த பிரச்சினைக்கு தீர்வு காண ‘நேர்மையான உயர் திறன் அமெரிக்க சட்டம் 2025’ கொண்டு வரப்பட்டுள்ளது.
இது பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு சட்டமாக்கப்படும். இதன்பிறகு விருப்ப பயிற்சி திட்டத்தில் அமெரிக்காவில் பணியாற்றி வரும் வெளிநாட்டினர் அவரவர் நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள்.என்று அமெரிக்க வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன……..