ரணில் இருந்திருந்தால் அமெரிக்க வரி விவகாரத்தை ஒரு தொலை பேசி அழைப்பில் முடித்து வைத்திருப்பார் என்று, முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்திருக்கின்றார். எலான் மஸ்க்கின் நெருங்கிய நண்பர்களில் ரணிலும் ஒருவர். அதனை பயன்படுத்தி இந்த விட யத்தை ரணில் கையாண்டிருப்பார் என்று அவர் தெரிவித்திருக்கின்றார்.
எலான் மஸ்க் ரணிலை அறிந்திருப்பாரா என்னும் விடயத்தை ஆராய்வதை விடுவோம். ஆனால், அமெரிக்க வரிவிதிப்பில் தனிநபர் கெட்டித்தனத்திற்கு இடமிருக்க முடியுமா? அமெரிக்காவின் வரிவிதிப்பு விவகாரம் ஓர் உலகளாவிய அமெரிக்க நடவடிக்கை. டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து பல அதிரடியான மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றார். இதில் வரிவிதிப்பு பிரதானமானது. இந்த வரிவிதிப்பின் பிரதான இலக்கு சீனாவாகும். சீனா தற்போது பதில் வரிவிதிப்பு என்னுமடிப்படையில் அமெரிக்கா மீதான வரிவிதிப்பை அறிவித்திருக்கின்றது.
ட்ரம்ப் நிர்வாகத்தின் வரி விதிப்பு அறிவிப்பை தொடர்ந்து ஐம்பதுக்கு மேற்பட்ட நாடுகள் வரிவிதிப்பில் தங்களுக்கு சலுகைகளை தருமாறு அமெரிக்க அதிபரிடம் கோரியிருக்கின்றன. அமெரிக்கா எதிர்பார்க்கும் விடயமும் இதுதான். அமெரிக்காவை தவிர்த்து, உங்களால் முடிந்தால் பயணம் செய்யுங்கள் என்பதே அமெரிக்காவின் மறைமுகமான எச்சரிக்கையாகும். இந்தப் பின்புலத்தில் இலங்கையும் இந்த வரிவிதிப்பால் பெரியளவில் பாதிப்படையக் கூடிய நாடுகளில் ஒன்றாகும். இறக்குமதி செய்யப்படும் அமெரிக்க பொருட்களுக்கான வரிவிதிப்பை நாங்கள் குறைக்கின்றோம் – அதேபோன்று, உங்களின் வரிவிதிப்பில் சலுகைகளை தாருங்கள் என்னும் கோரிக்கையை அநுரகுமார அரசாங்கம் முன்வைத்திருக்கின்றது.
இதனை அமெரிக்க நிர்வாகம் எந்தளவிற்கு கருத்தில்கொள்ளும் என்பது பொருத்திருந்தே நோக்க வேண்டியது. இது ஓர் உலகளாவிய அணுகுமுறை என்பதால் இதில் ஒரு குறிப்பிட்ட நாட்டுக்கு வாய்ப்பு வழங்கினால் அதனை முன்னுதாரணமாகக் கொண்டு ஏனைய சிறிய நாடுகளும் அதே கோரிக்கையை முன்வைக்கும். எனவே அமெரிக்கா நிர்வாகம் இதனை எவ்வாறு கையாளும் என்பது சிக்கலானதுதான். பொதுவாக ரணில் விக்கிரமசிங்க ஒரு மேற்கு சார்பானவர் – எனவே, அவரால் சில விடயங்களை சாத்தியப்படுத்த முடியும் என்னும் நம்பிக்கை சிலரிடமுண்டு.
ரணில் மேற்கு சார்பானவர் என்பது ஒரு பழைய பார்வைதான். ஆனால், அது இப்போதும் எந்தளவிற்கு சரியாக இருக்கும் என்பதும் ஆராயப்பட வேண்டியது. ஆனால் பிரச்னையோ வேறு – உண்மையில் இவ்வாறான விடயங்களில் தனிநபர் கெட்டித்தனம் பயனற்றது. ஆனால், ரணில் விக்கிரமசிங்க அதிகாரத்தில் இருந்திருந்தால் இந்த விடயத்தை அதிகம் இந்தியாவை சார்ந்து கையாளும் முடிவை எடுத்திருக்க வாய்ப்புண்டு. ஏனெனில், ரணில் விக்கிரமசிங்க தற்போது எட்கா உடன்பாட்டை இறுதி செய்யுமாறு அரசாங்கத்திற்கு ஆலோசனை கூறுகின்றார். தற்போது உலகளவில் ஏற்பட்டுவரும் மாற்றங்களை கருத்தில் கொண்டு தான் அவர் இதனைக் கூறுகின்றார். ஆனால் ரணில் இருந்திருந்தால் அவர் அமெரிக்க வரிவிதிப்பை ஒரு தொலைபேசி அழைப்பில் முடித்து வைத்திருப்பார் என்பதெல்லாம் ரணில் பக்தியின் விளைவே தவிர, அது உண்மையல்ல.