அம்பாறை மாவட்டத்தில், கடந்த வாரம் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருந்த நிலையில், சில நாட்களாக மழை சற்று ஓய்ந்திருந்த நிலையில், இன்று அதிகாலை முதல் மீண்டும்
மழை பெய்ய ஆரம்பித்துள்ளது.
காலநிலையில் திடீரென ஏற்பட்ட மாறுதல்களால் மக்கள் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
நாவிதன்வெளி ,கல்முனை ஆகிய பகுதிகளில், பிரதான போக்குவரத்துப் பாதைகள் வெள்ள நீர் தேங்கியமையால், போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்டத்தின் கடற்பிராந்தியங்களும், கொந்தளிப்பாகக் காணப்படும் நிலையில், மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கைகளை தவிர்த்து வருகின்றனர்.
ஏற்கனவே வயல் நிலங்களில் நீர் தேங்கியிருந்தமையால், நெற் செய்கை பாதிக்கப்பட்ட நிலையில், மீண்டும் மழை பெய்ய ஆரம்பித்தமையால், பாதிப்புக்கள்
மேலும் அதிகரிக்கும் என விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.