பெண் தலைமை தாங்கும் குடும்பம் ஒன்றிற்கு, அம்பாறை கல்முனை சேனைக்குடியிருப்பு-1 பகுதியில், கல்முனை 18 ஆவது விஜயபாகு காலாட் படைப்பிரிவு முகாம் இராணுவத்தினரால் வீடொன்று நிர்மாணித்து கொடுக்கப்பட்டு உத்தியோக பூர்வமாக இன்று கையளிக்கப்பட்டது.
இலங்கை இராணுவத்தினால் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் குடும்பத்துக்கு வீடு ஒன்றை நிர்மாணித்துக் கொடுக்கும் வேலைத்திட்டத்தின் கீழ், அம்பாறை மாவட்ட
இலங்கை இராணுவத்தின் 24 வது காலாட்படை பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் அனில் பெரேராவின் ஆலோசனைக்கமைய, 241 இராணுவ பிரிவின் கட்டளை அதிகாரி கேணல் தனிக பதிரட்னவின் வழிகாட்டலில், அம்பாறை கல்முனை 18 ஆவது விஜயபாகு காலாட் படைப்பிரிவின் கட்டளை தளபதி மேஜர் ருவான் சேனாரத்னவின் ஏற்பாட்டில் வீட்டிற்கான அடிக்கல் கடந்த மே மாதம் நாட்டப்பட்டது.
கணவனை இழந்து 9 வயது மகள் மற்றும் 6 வயது மகனுடன் வாழ்ந்து வந்த பயனாளியான திருமதி துரைராசா சுரேஜினிக்கு தமிழ் முஸ்லீம் தனவந்தர்களின்
ஒத்துழைப்புடன் இராணுவத்தினருடைய கட்டுமான பங்களிப்புடன் வீடு நிர்மாணித்து வழங்கப்பட்டது.
241 இராணுவ பிரிவின் கட்டளை அதிகாரி கேணல் தனிக பதிரட்ன மற்றும் கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரி.ஜே.அதிசயராஜ் ஆகியோர் பயனாளிகளிடம் வீட்டினைக் கையளித்தனர்.
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ஏ.பி.ஆர்.எஸ். சந்திரசேன, அம்பாறை கல்முனை 18 ஆவது விஜயபாகு காலாட் படைப்பிரிவின் கட்டளை அதிகாரி உள்ளிட்ட கல்முனை வடக்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.