அம்பாறை நிந்தவூரிலிருந்து, மருத்துவத் துறைக்கு தெரிவான முதலாவது தமிழ் மாணவிக்கு பாராட்டு

0
141

வெளியாகியுள்ள க.பொ.த.உயர் தரப் பரீட்சை முடிவுகளின் பிரகாரம், அமபாறை நிந்தவூர் அல் அஷ்ரக் தேசிய பாடசாலையில் இருந்து மருத்துவத் துறைக்குத் தெரிவு செய்யப்பட்ட குணசேகரம் ஜனுசிகாவை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.


நிந்தவூர் பெஸ்ட் ஒப் யங் சமூக சேவைகள் அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் த.கலையரசன்
பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.கௌரவ அதிதிகளாக நிந்தவூர் கோட்டக் கல்வி பணிப்பாளர் எம் சரிபுத்தீன், நிந்தவூர் அல் அஷ்ரக் தேசிய பாடசாலையின் அதிபர் ஏ அப்துல் கபூர், பெஸ்ட் ஒப் யங் அமைப்பின் செயலாளர் ஏ.புஹாது ஆகியோர் கலந்து கொண்டனர்.


நிந்தவூரின் வரலாற்றில் முதல் தடவையாக மருத்துவத் துறைக்கு தெரிவு செய்யப்பட்ட முதலாவது தமிழ் மாணவி என்ற பெருமையைப் பெற்றுள்ள ஜனுசிகாவை நாடாளுமன்ற உறுப்பினர் த. கலையரசன் பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் மற்றும் பரிசில் வழங்கி கௌரவித்தார்.