கலால் திணைக்களத்தின் முக்கிய உத்தியோகத்தர்கள் ஓய்வு பெறுவதால் எதிர்காலத்தில் அதன் செயற்பாடுகள் செயலிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இன்னும் 5 மாதங்களுக்குள் 4 முக்கிய நிர்வாக அதிகாரிகளும் ஓய்வு பெறவுள்ளனர் என மேற்படி திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நிர்வாகத்தை நடத்தி வரும் 6 அதிகாரிகளில் இருந்து கலால் திணைக்கள ஆணையாளர் மற்றும் துணை ஆணையாளர் டிசம்பரில் ஓய்வு பெற்றுள்ளனர்.
மேலும், தற்போது கடமைகளை முன்னெடுப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஆணையாளரும் பெப்ரவரி 25 ஆம் திகதி ஓய்வு பெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால், எதிர்காலத்தில் ராஜகிரியில் உள்ள கலால் தலைமை அலுவலகத்தின் நிர்வாக செயல்பாடுகளை பராமரிக்க முடியாத நிலை ஏற்படும் என கூறப்படுகிறது.
இது தொடர்பில் அவதானம் செலுத்திய கலால் நிர்வாக அதிகாரிகள், அனுபவம் குறைந்த உத்தியோகத்தர்களுக்கு பயிற்சியளிக்கும் வரை சிரேஷ்ட அதிகாரிகளுக்கு ஓய்வு வழங்க வேண்டாம் என அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
ஆனால், இது தொடர்பாக அரசு கவனம் செலுத்தாததால், நாட்டுக்கு தேவையான நேரத்தில் வரிப்பணத்தை வசூலிக்க முடியாத நிலை ஏற்படும் என, கலால் நிர்வாக அதிகாரிகள் கருதுகின்றனர்.