தேசிய மக்கள் சக்தியின் கடற்றொழில் மற்றும் நீரியல்வள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரர், ‘தமிழ் மக்களின் தனித்துவம் பாதுகாக்கப்பட வேண்டும்’, என்று தெரிவித்திருக்கிறார். சந்திர சேகர் யாழ்ப்பாணத்தில் முகாமிட்டு நீண்டகாலமாக மக்கள் மத்தியில் தொடர்புகளை பேணிவருகிறார்.
தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்றத்துக்குத் தெரிவான அவரை, அவரின் அயராத – அர்ப் பணிப்புமிக்க உழைப்புக்காகவே ஜே. வி. பியை தீர்மானிப்பவர்கள் கடற்றொழில் அமைச்சாராக நியமித்திருந்தனர். இதற்கு முன்னரும் அவர் தேசியப் பட்டியல் மூலம்தான் பாராளுமன்றம் சென்றிருந்தார். ஜே. வி. பியின் நீண்டகால உறுப்பினர்களாக தமிழர்கள் எவரும் இல்லாத காரணத்தால் – குறிப்பாக, வடக்கு – கிழக்கை சேர்ந்த எவருமே ஜே.வி.பியில் நீண்டகாலமாக இல்லாமையால் தான் சந்திர சேகர் வடக்குக்கு வரவேண்டிவந்தது.
நாட்டில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களும் தமிழ் கட்சிகளின் உள்சண்டைகளும் சந்தித்தபோது சந்திரசேகர் எதிர்பாராதவிதமாக முக்கிய அரசியல் புள்ளியானார். அநுர அலை ஏற்படுத்திய கவர்ச்சியின் காரணமாகவே பலரும் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டிருந்தனர் – இப்போது, உள்ளூராட்சி தேர்தலிலும் பலர் போட்டியிடவுள்ளனர். தமிழ்த் தேசியம் பேசிய கட்சிகள்மீது மக்கள் கொண்டிருந்த வெறுப்புணர்வு அநுர அலையின்மீதான கவர்ச்சியாக மாறியதால் அரசியலில் முகவரியில்லாத பலர் ஜே.வி.பியின் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களாகி விட்டனர். ஆனால், அவ்வாறானவர்களுக்கு எவ்வாறான அதிகாரம் இருக்கிறது என்பதை குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியதில்லை.
நீண்ட காலமாக ஜே. வி. பியின் உறுப்பினராக இருக்கின்ற சந்திரசேகர்கூட, ஜே.வி.பியின் கொள்கை நிலைப்பாடுகளை தீர்மானிக்கும் வல்லமையுள்ளவர் அல்லர். சந்திரசேகர் எதனையும் பேசலாம். ஆனால், ஜே.வி.பியின் தீர்மானங்களை எடுக்கும் வல்லமையுள்ளவர்கள் என்ன நினைக்கின்றனர் – எதனை செய்ய விரும்புகின்றனர் என்பதில்தான் அனைத்துமே தங்கியிருக்கிறது. பொதுஜன பெரமுன அரசாங்கம் ஆட்சியில் இருந்த காலத்திலும் பல அமைச்சர்கள் பல்வேறு விடயங்களை பேசுவதுண்டு.
மேலோட்டமாக நோக்கினால் அவர்கள் அதிகாரமுள்ளவர்கள் போன்றுதான் தெரியும்.
ஆனால், உண்மையான அதிகாரமுள்ளவர்கள் அனைவருமே ராஜபக்ஷ குடும்பத்துக்குள் மட்டும்தான் இருந்தனர். இதே போன்று தேசிய மக்கள் சக்தியில் 159 பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கலாம். ஆனால், தீர்மானம்மிக்க முடிவுகளை எடுப்பவர்களோ விரல்விட்டு எண்ணக்கூடியவர்கள்தான். வெளிவிவகார பிரதி அமைச்சராக ஒருவர் நியமிக்கப்பட்டார். ஆனால், இன்றுவரையில் அவர் என்ன செய்கிறார் என்றுகூட யாருக்கும் தெரியாதளவுக்கே அவர் இருக்கிறார்.
தமிழ் மக்களின் தனித்துவத்தை பாதுகாப்பது முக்கியம் என்று சந்திரசேகர் பேசலாம். ஆனால், எப்படி பாதுகாப்பது? அதற்காக தனது கட்சிக்குள் சந்திரசேகர் எவ்வாறான அழுத்தங்களை கொடுத் திருக்கிறார்? தமிழ் மக்களின் தனித்துவத்தை நிலைநாட்டக்கூடியவாறான அரசியல் ஏற்பாடுகளை உறுதிப்படுத்தினால்தானே அவர்கள் தனித்துவத்துடன் வாழலாம். முதலில் வடக்கு – கிழக்கில் மாகாண சபைத் தேர்தலை நடத்தி மாகாண சபைகள் சுதந்திரமாக இயங்கக்கூடிய சூழலை ஏற்படுத்துங்கள்.