அரசியலமைப்பின் 22வது திருத்தம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டமை பாராட்டுக்குரியது எனவும் அது ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்படுவதை உறுதி செய்வது மக்கள் பிரதிநிதிகளின் பொறுப்பு எனவும் சமூக நீதிக்கான தேசிய இயக்கம், தெரிவித்துள்ளது.
அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தை புதுப்பிப்பதற்கு எடுக்கப்பட்ட சாதகமான நடவடிக்கையாக இதை கருதுவதாக முன்னாள் சபாநாயகரும் சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவருமான கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
22 ஆவது திருத்தம் தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
குறித்த அறிக்கையில்,
முந்தைய வரைபில் உள்ளடங்கிய நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையின் பல முக்கிய அதிகாரங்களை தக்கவைத்துக்கொள்ளும் முயற்சிகளை இல்லாதொழிக்க ஜனநாயகத்தை மதிக்கும் அனைவரும் செப்டம்பர் 6 ஆம் திகதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
சமூக நீதிக்கான தேசிய இயக்கம் என்ற வகையில், இதுபோன்ற ஜனநாயக சீர்திருத்தங்களுக்காக குரல் கொடுத்த ஜனாதிபதி நீதி அமைச்சர் உட்பட்டவர்களுக்கு எமது நன்றியைத் தெரிவித்து கொள்கிறோம்.
எதிர்கால சந்ததியினர் வாழும் நாட்டை உருவாக்குவதே இந்நாட்டு மக்கள் பிரதிநிதிகளின் தலையாய பொறுப்பு.
எனவே ஜனநாயகம் மற்றும் மக்களின் முன்னேற்றத்தை உறுதி செய்வதன் மூலம் மகிழ்ச்சியாக வாழ முடியும்.
அந்தப் பொறுப்பை நிறைவேற்றும் வகையில், மேற்கொள்ளப்பட வேண்டிய அரசியல் மற்றும் பொருளாதார சீர்திருத்தங்களில் கவனம் செலுத்த வேண்டும்.
இதனால் தான் கடந்த அரசாங்கம் கொண்டு வந்த 20வது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராகப் போராடி, அதை திரும்பப் பெறப் போராட வேண்டியிருந்தது.
எந்தச் சூழலிலும் ஜனநாயகத்துக்காகப் பெரும் தியாகங்களைச் செய்த தொழிற்சங்கத் தலைவர்கள் மற்றும் அமைதிப் போராட்டத்தின் செயல்பாட்டாளர்களைத் துன்புறுத்துவதை மன்னிக்க முடியாது.
இத்தகைய நிகழ்வுகள் நாட்டில் தேசிய மற்றும் சர்வதேச அளவில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துகின்றன.
எனவே இந்த விடயங்களில் ஜனாதிபதி தனிப்பட்ட கவனம் செலுத்த வேண்டும் என அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.