பழையன கழிதலும் புதியன புகுதலும் காலத்தின் நியதி. இந்த நியதியை ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயம் உண்டு. இதனை மறுக்கின்றபோது நிலைமைகள் புத்தாக்கம்மிக்கனவாக இருக்கப் போவதில்லை. தேர்தல் என்றவுடன் பலர் போட்டியிட முனைவதுண்டு. அதில் தவறில்லை ஆனால், எப்போதும் நாங்கள் மட்டும்தான் போட்டியிட வேண்டுமென்று அடம்பிடிப் பதுதான் தவறானது. கேட்டால் நாங்கள் நாற்பது வருடங்கள் அரசியலில் இருக்கின்றோம் என்று சிலர் கூறுவதுண்டு. இங்கு ஒருவர் அரசியலில் எத்தனை வருடங்கள் இருக்கின் றோம் என்பதல்ல, முக்கியமானது. ஆனால், அவர் எவ்வாறான அரசியல் மரபொன்றை அடுத்த தலைமுறைக்கு விட்டுச் செல்கின்றார் என்பதுதான் முக்கியமானது.
அப்படிப் பார்த்தால் தற்போதுள்ள மூத்த அரசியல்வாதிகள் என்போர் பலர் அவ்வா றான தகுதிநிலையில் இல்லை. ஆனால், அவர்களது பாரா ளுமன்றம் செல்ல வேண்டுமென்னும் போதை மட்டும் அடங்க வில்லை. இம்முறை தேர்தல் களம் முற்றிலும் வித்தியாசமானதாக இருக்கப்போகின்றது. இந்த அலையில் யார் யாரெல்லாம் அள்ளுண்டு போகப்போகின்றனர் என்று தெரியவில்லை ஆனால், நிச்சயமாக பலர் தோற்கப்போவது நிச்சயமானது. இந்த கள யதார்த்தத்தை பலர் புரிந்து கொள்ளவில்லை – ஆனால், ஆகக்குறைந்தது புரிந்துகொள்ள முயற்சிப்பதாகக் கூடத் தெரிய வில்லை. தமிழ்த் தேசிய அரசியலின் பழைய சுலோக வகைப்பட்ட அணுகுமுறைகளின் காலம் முடிந்துவிட்டது.
தேசியமும் முக்கி யம் அதேவேளை அதனை புதிய அணுகுமுறைகளால் முன் னெடுக்க வல்லவர்களே இப்போது தேவையானது. ஏற்கனவே அரசியலில், தங்களை அனுபவசாலிகள் என்று அடையாளப் படுத்தியிருப்பவர்கள் பலரின் அணுகுமுறைகள் அனைத்துமே படுமோசமான தோல்வியை சந்தித்திருக்கின்றது. இந்த நிலை யில் அவ்வாறானவர்கள் தங்களை தொடர்ந்தும் தகுதியுள்ளவர் களாக அடையாளப்படுத்துவதை இனியும் மக்கள் சகித்துக்கொள் ளப் போவதில்லை. இளைய தலைமுறையினர் தமிழ்த் தேசிய அரசியலிலிருந்து தொடர்ந்தும் விலகிச் செல்கின்றனர்.
அவர்கள் தமிழ்த் தேசிய அரசியலில்தான் இருக்கின்றனர் என்பதும் சந்தேகமானது. ஓர் அரசியல் போக்குக்குள் புதிய தலைமுறையினரை கட்டிப் போட முடியாமல் போனால், குறித்த அரசியல் போக்கு அரை உயிரில் தான் இருப்பதாகக்கொள்ள முடியும். பழைய முகங்களை முன் வைத்து முன்னெடுக்கப்படும் உயிர்ப்பற்ற அரசியல் செயல் பாடுகளால் மிகுதியிருப்பதும் காலப்போக்கில் இல்லாமல் போய் விடும். தமிழ்த் தேசிய அரசியலின் இன்றைய நிலைமை இதுதான். இந்த நிலைமையை மாற்றுவது என்பது சவாலானது. இன்று அரசியலை தீர்மானிப்பதாக தங்களை தாங்களே கூறிக் கொள்ளும் பலர் இந்த அரசியல் யதார்த்தத்தை புரிந்துகொள்ளும் கடப்பாட்டை வேண்டுமென்றே மறுதலிப்பவர்களாகவே இருக் கின்றனர். ஒரு கொள்கைசார் அரசியல் என்பது, அஞ்சலோட்டம் போன்றது ஆனால், அஞ்சல் கோல் முறையாக மற்றவரிடம் கையளிக்கப்பட்டால் மட்டும்தான், அஞ்சலோட்டம் தொடரும்.