தமிழ்த் தேசிய அரசியல் சூழல் சதிக் கோட்பாடுகளுக்கு பிரபல்யமா னது. இப்போது அதனோடு பொய்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டியிருக்கின்றது.
உலகப் புகழ்பெற்ற சர்வதேச அரசியல் நிபுணர் ஜோன் மியர்ஷைமர் – ‘ஏன் தலைவர்கள் பொய் சொல்கின்றனர்’ என்னும் தலைப்பில் ஒரு நூலை எழுதியிருக்கின்றார். அமெரிக்க – யூதரான மியர்ஷைமர் இன்றுள்ள உலகளவிலான அரசியல் அறிஞர் களில் முதன்மையானவராவார்.
அமெரிக்காவின் தலைவர்கள் காலத் துக்குக் காலம் எவ்வாறு பொய்களை கூறியிருக்கின்றனர் என்பதை பதிவு செய்திருக்கும் அவர், பொய்களை சுயநலம் சார்ந்ததாகவும் நாட்டின் நலனுக்கான பொய்களென்றும் வரையறுத்திருக்கின்றார். அதாவது, அரசியலில் பொய்கள் தவிர்க்க முடியாமல் போகும்போது ஓர் அரசியல் தலைவர் அதனை கைக்கொள்வது தவறல்ல.
ஆனால், அந்தப் பொய்க்குப் பின்னால் மக்கள் நலன் இருக்க வேண்டும் – நாட்டின் எதிர்காலம் இருக்க வேண்டும். உதாரணமாக, பனிப்போர் கால கியூப ஏவுகணை நெருக்கடியின்போது அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி கென்னடி சோவியத் ஒன்றியத்தின் தலைவர் கொர்பச் சோவுடன் ஓர் இரகசிய உடன்பாட்டை செய்து கொள்கின்றார்.
இதனை மணந்து பிடித்துக் கொண்ட ஊடகமொன்று குறித்த உடன்பாடு பற்றி கேள்வியெழுப்பியபோது, கென்னடியோ அப்படியோர் உடன்பாடு இல்லை – என்றார். ஒரு ஜனாதிபதியாக அவர் அமெரிக்க மக்களுக்கு பொய் கூறினார். ஆனால், அந்தப் பொய்க்கு பின்னால் அமெரிக்க நலன் இருந்தது. எனவே, அந்த அரசியல் பொய்க்கு ஒரு பெறுமதியுண்டு. தமிழ் பொது வேட்பாளர் விவகாரம் அதிக கவனத்தைப் பெற்றி ருக்கின்றது. இதன் காரணமாகவே எதிர்ப்புக் கருத்துகளும் அதிகமாக எட்டிப்பார்கின்றன.
ஆனால், அவைகள் எவையுமே தர்க்கரீதியில் தமிழ் பொது வேட்பாளர் நிலைப்பாட்டை நிராகரிக்கும் ஆற்றல் கொண் டவையல்ல. மாறாக, பொய்களை கூறுவதன் ஊடாக விடயங்களை முன்வைப்பவர்களின் ஆத்மபலத்தை சிதைக்கும் நோக்கம் கொண்ட வையாகவே இருக்கின்றன. இவற்றை நாம் மக்கள் விரோத பொய்கள் எனலாம். ஏனெனில், பொது வேட்பாளர் நிலைப்பாட்டுக்கு எதிரான கருத்துகள் அனைத்துமே வெறும் சுயநலனுக்காகவும் – தங்களின் எஜமான விசுவாசத்துக்காகவும் கட்டப்படும் கதைகளாவே இருக்கின்றன.
தமிழ் பொது வேட்பாளர் விடயத்தில் இலங்கை தமிழ் அரசு கட்சி அதன் முடிவை எதிர்வரும் 19ஆம் திகதி அறிவிப்பதாகக் கூறியுள்ளது. தமிழ் பொது வேட்பாளர் நிலைப்பாட்டை கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கடுமையாக எதிர்த்து வருகின்றார். இவ்வா றானதொரு பின்புலத்தில் தன்னை தமிழ் பொது வேட்பளாராக
களமிறங்குமாறு ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கேட்டாரென சுமந்திரன் பொது வெளியில் தெரிவித்திருக்கின்றார்.
அது உண்மையல்ல – பொய் என்று சுரேஷ் தெரிவித்திருக்கின்றார். தமிழ் பொது வேட்பாளர் விவகாரத்தை எதிர்ப்பதற்கு அரசியல் பொய்களும் தேவைப்படுகின்றனவா என்னும் கேள்வியெழுகின்றது. ஆனால், பொது வேட்பாளர் விவகாரத்தை முன்னெடுத்துவரும் சிவில் சமூக அமைப்புகள் எவையுமே இதுவரையில் வேட்பாளர் தொடர்பில் பேசவில்லை. விடயங்கள் உரையாடல் நிலையிலேயே இருக்கின்றன.
19ஆம் திகதி, தமிழ் அரசு கட்சியின் தீர்மானத்தை உற்றுநோக்கிய பின்னர்தான் விடயங்கள் அடுத்த கட்டத்தை நோக்கி நகரவுள்ளன என்று சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் கூறுகின்றனர். இவ்வாறானதொரு நிலையில், வேட்பாளர் தொடர்பில் எதற்காக மல்லுக்கட்ட வேண்டும்? பொய்யைச் சொன்னாலும் பொருந்தச் சொல்ல வேண்டுமென்று ஒரு கூற்றுண்டு.