அரசியலில் வாய்ப்புக்களை தவறவிட்டால்?

0
102

அரசியல் என்பது சாத்தியங்களை கையாளும் கலை என்று ஒரு கூற்றுண்டு – ஏனெனில் அரசியல் என்பது துல்லியமான விஞ்ஞானமல்ல – அதாவது, அரசியலில், சில சமன்பாடுகளின் துணை கொண்டு பெறுபேறு களை காணமுடியாது. அரசியல் என்பது அடிப்படையில் அதிகாரத்தை கைப்பற்றுவற்கான ஓர் இடையறாத இயங்குநிலை. இந்த இயங்குநிலையில், ஏற்றங்களும் இறங்களும் ஏற்படலாம் – ஏற்றம்வருகின்ற போது, அது ஒரு வகையான ஆட்டமாகவும். மறுபுறமாக, இறங்கங்கள் வருகின்ற போது, அது இன்னொரு வகையான ஆட்டமாகவும் அமையும்.
இதனை புரிந்து கொண்டுதான் அரசியலில் தீர்மானங்களை எடுக்க வேண்டும். தமிழ் தேசிய அரசியல் வரலாற்றை எடுத்துக் கொண்டால் வாய்ப்புக்கள் கிடைக்கவே இல்லை என்று எவருமே வாதிட முடியாது – ஆனால் அந்த வாய்ப்புக்களை, குறிப்பிட்ட காலத்தில் இருந்த அரசியல் தலைமைகள், தூர நோக்குடன் கையாளவில்லை என்பது வரலாறு. கழிந்து செல்லும் நாட்கள் எல்லாம் வாழ்நாட்கள் என்று கூறுவது போன்று, அரசியலில் தவற விடப்படும் வாய்ப்புக்கள் அனைத்தும் நமது அரசியல் இலக்கை சிதைக்கும் விடயங்களாகும்.
ஏனெனில் ஒரு காலகட்டத்தில் கிடைக்கும் வாய்ப்பு இன்னொரு கால கட்டத்தில் கிடைக்கப் போவதில்லை. இந்த இடைப்பட்ட காலத்தில் நாம் எதிர்பார்த்தவாறு அரசியலை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாவிட்டால், நாம் மேலும் பின்னடைவை சந்திப்போம். அது போராடாமல் இருந்தி ருந்தால் கூட, அவ்வாறானதொரு நிலையை நாங்கள் அடைந்திருக்க மாட்டோம் என்னும் நிலைமையை ஏற்படுத்தும்.
தமிழர் அரசியல் நகர்வுகளை உற்றுநோக்கினால் வாய்ப்புக்களை தவற விட்ட ஒவ்வொரு சந்தர்ப்பங்களும் எவ்வாறு, தமிழர் அரசியலை மோசமாக பாதித்திருக்கின்றது என்பதை நாம் காணலாம்.
வாய்ப்புக்களை தவறவிடுகின்ற போது இரண்டு விடயங்களே நிகழ முடியும் – ஒன்று, வாய்ப்புக்கள் மீண்டும் கிடைக்கும் வரையில் காத்திருக்க வேண்டும் – அதில் ஓர் ஆபத் துண்டு – அதாவது, வாய்ப்புக்கள் மீண்டும் கிடைக்காமலேயே போகலாம். இரண்டு, எங்களுடைய முயற்சிகளால் புதிய வாய்ப்புக்களுக்கான கதவுகளை திறப்பது.
இன்று தமிழர் அரசியல் இவ்வாறானதொரு நிலையில்தான் இருக்கின்றது. வாய்ப்புக்களை தமிழர்கள்தான் உருவாக்க வேண்டும். கடந்த பதின் நான்கு வருடகால அனுபவங்கள் இதனை தெளிவாக உணர்த்தி நிற்கின்றன. இந்த காலத்தின் எதிர்பார்ப்புக்கள் எவையும் ஈடேறவில்லை – ஈடேறப் போவதுமில்லை. ஏனெனில் ஈழத்தமிழர்கள் பலமான ஒரு சர்வதேச நண்பனை சம்பாதித்துக்கொள்ளவில்லை.
இந்து சமுத்திர பிராந்தியத்தை பொறுத்தவரையில் – இந்தியாவை தாண்டி அவ்வாறானதொரு நண்பனை பெறவும் முடியாது. அதற்கான வாய்ப்புக்கள் கிடைத்தும், அதனை தமிழர் தரப்பு அறியாமை யாலும் மற்றும், விடயங்களை தூரநோக்கில் அணுகத் தவறியதாலும், பல வான் நண்பனை பெறும் பாக்கியத்தை இழந்துபோனது.
1980களுக்கு பின்னரான சூழலில், பிராந்திய சக்தியான இந்தியாவின் பரிபூரண நடப்பு, ஈழத் தமிழர்களின் காலடியில் இருந்தது. ஆனால் – பேருந்தை தமிழர் தவற விட்டனர். இனி அது பற்றிப் பேசிப் பயனில்லை. ஆனால், இனியாவது கடந்த காலத்திலிருந்து கற்றுக்கொண்டு முன்னோக்கி நகர்வது எவ்வாறு – என் பதை கற்றுக்கொள்வது மட்டுமே தமிழர்களுக்கு முன்னால் எஞ்சியிருக்கும் வரலாற்று பணியாகும்.
இன்றைய சூழலில் தமிழர்கள் ஒரு தேவையான மக்கள் கூட்டம் என்பதை நிரூபித்தால் மட்டுமே, ஈழத் தமிழர்கள் மீது வெளித் தரப்புக்களின் கடைக்கண் பார்வை படும். அதனை எவ்வாறு ஏற்படுத்துவது? வெறுமனே அறிக்கைகளும் ‘யூரியூப்’ ஆவேசங்களை மட்டுமே செய்து கொண்டிருந்தால், தமிழர்கள் முன்னோக்கி நகர முடியுமா – அதற்கான வாய்ப்பு தமிழர் படலையை தட்டுமா? நிச்சயமாக இல்லை. இந்த நிலையில்தான் நமக்கான ஒரு வரலாற்று வாய்ப்பாக ஜனாதிபதி தேர்தல் கிடைத்திருக்கின்றது.
அது வழமையான தேர்தல் போல் சாதாரணமானதாக இருந்திருந்தால், இது நிச்சயம் ஒரு வாய்ப்பாக இருந்திருக்கப் போவதில்லை – ஆனால், இது ஒரு நெருக்கடியான தேர்தல். தென்னிலங்கை நெருக்கடியில் இருக்கின்ற போதுதான், ஈழத் தமிழர் ஒப்பீட்டடிப்படையில் வாய்ப்புக்களை பெறுகின்றனர்.