தமிழ்த் தேசிய அரசியலை நிறுவனமயப்படுத்தும் விடயத்தில் தமிழ் கட்சிகள் தவறியிருக்கின்றன என்னும் ஒரு சிறுபான்மை வாதமுண்டு. இதேபோன்றுதான் தமிழ் மக்களை ஒரு தேசமாக திரட்டுதல் என்னும் கோஷமும் முன்வைக்கப்படுவதுண்டு. அரசியலை சமகால நிலையில் நோக்கத் தவறுகின்றபோதுதான் இவ்வாறான வாதங்கள் மேலெழுகின்றன.
ஈழத் தமிழ்த் தேசிய அரசியலை நிறுவனமயப்படுத்த முடியாது – ஏனெனில், அதற்கான தூரநோக்குள்ள தலைமை ஈழத் தமிழர்கள் மத்தியில் இல்லை. தூரநோக்கற்ற விடயம் ஒவ்வொன்றையும் புத்திபூர்வமாக நோக்கும் திறனற்ற தலைவர்கள் என்போர் மேலாதிக்கம் செலுத்தும் அரசியல் சூழலில், இவ்வாறான வாதங்கள் அனைத்துமே ஏட்டுச் சுரக்காய் போன்றதுதான்.
அது ஒரு போதும் செயல்பாட்டுக்கு உதவப் போவதில்லை. தமிழ் மக்களை ஒரு தேசமாகத் திரட்டுதல் என்னும் கோஷ த்துடன்தான், தமிழ் பொது வேட்பாளர் என்னும் நிலைப்பாடு தலைநீட்டியிருந்தது. ஆனால், அந்த முயற்சி படுமோசமான தோல்வியை சந்தித்திருந்தது. அனைத்துக் கட்சிகளையும் அதனை நோக்கி ஒன்றிணைக்க முடியவில்லை. அத்துடன், ஒன்றிணைந்த கட்சிகளைக்கூட ஓரணியாகப் பேணிப் பாதுகாக்க முடியவில்லை.
முயற்சியை மேற்கொண்டவர்களில் ஒரு பகுதியினரே அனைத்தையும் குழப்பியடிக்கும் சதிச்சக்திகளாகவும் தொழில்பட்டனர். இதற்கு பலவாறான காரணங்களை குறிப்பிட்ட போதிலும்கூட, உண்மையான காரணம், தேசத்தைத் திரட்டப் போவதாகக் கூறிக்கொண்டவர்கள் மத்தியில் அதற்கான தலைமைத்துவ ஆற்றல் இருக்கவில்லை. இன்று ஈழத் தமிழர் அரசியல் எதிர்கொண்டிருக்கும் அனைத்து நெருக்கடிக்கும் தலைமைத்துவ பிரச்னையே அடிப்படையான காரணமாகும். ஒரு வலுவான தலைமையின்றி முன்னெடுக்கப்படும் அனைத்து அரசியல் முன்னெடுப்புக்களுமே இறுதியில், இருப்பதையும் சிதைக்கும் பணியையே மேற்கொள்ளும்.தமிழ் பொது வேட்பாளர் விவகாரம் இதற்கான ஆகப் பிந்திய சிறந்த உதாரணமாகும்.
இந்தப் பின்புலத்தில் நோக்கினால் தமிழ்த் தேசிய அரசியல் என்பது இப்போது சூம் செயலியிலும் யூ-ரியூப் தளங்களிலும் தான் இருக்கின்றது. அதற்கு மேல் தமிழ்த் தேசிய அரசியல் என்பதற்கு எந்தவொரு செயல் வடிவமும் இல்லை. தமிழ்த் தேசிய அரசியல் தென்னிலங்கைக்கு நெருக்கடியான ஒரு விடயமாகவே முன்னர் இருந்தது. தென்னிலங்கைக்கு ஈழத் தமிழர் அரசியல் நெருக்கடியாக இருக்கும்போது மட்டும்தான், இலங்கைத் தீவில் ஈழத் தமிழர் அரசியலானது தமிழ்த் தேசிய அரசியல் என்னும் பெறுமதியை எட்ட முடியும்.
ஈழத் தமிழர் அரசியலுக்கு அரசியல் ரீதியில் வலுவானதொரு பெறுமதியும் உருவாக முடியும். ஆனால், தற்போதைய நிலையில் அவ்வாறானதோர் அரசியல் பெறுமதி ஈழத் தமிழர் அரசியலுக்கு இல்லை. இதனைப் புரிந்து கொள்ளாமல் முன்வைக்கப்படும் வாதங்கள் அனைத்தும் வெறும் புனைவுகளாகவே இருக்க முடியும். இந்த அடிப்படையில் சிந்தித்தால், ஈழத் தமிழரை ஒரு தேசமாகத் திரட்டுவது தமிழ்த் தேசிய அரசியலை நிறுவனமயப்படுத்துவது போன்ற சொற்கள் பெறுமதியற்றவவை.