கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தின் ஐம்பதுக்கும் அதிகமான உறுப்பினர்கள் இந்த தடவை பொதுத் தேர்தலில் போட்டியிடவில்லை. இலங்கையின் அரசியல் வரலாற்றில் முன்னென்றும் இவ்வாறு நடந்ததில்லை. முன்னாள் ஜனாதிபதிகள், அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சரகள் மாத்திரமல்ல எதிர்க் கட்சிகளைச் சேர்ந்த பலரும் இதில் அடங்குகிறார்கள்.
சிலர் முற்றாகவே அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாகவும் அறிவித்திருக்கிறார்கள். இவர்கள் எல்லோரும் தங்களது தீர்மானத்துக்கு பல்வேறு காரணங்களை கூறியிருக்கின்ற போதிலும், உண்மையான காரணம் தேர்தலில் தங்களை மக்கள் நிராகரிப்பார்கள் என்ற பயத்தை தவிர வேறு ஒன்றும் இல்லை என்பது எல்லோருக்கும் தெரிந்த இரகசியம். தோல்வி நிச்சயம் என்று தெரிந்தாலும், ஒதுங்கியிருக்கவோ அல்லது அரசியலில் இருந்து விலகவோ மனமில்லாத சில மூத்த அரசியல்வாதிகள் மாத்திரமல்ல இளையவர்களும் கூட வெட்கங்கெட்ட முறையில் தங்களது கட்சிகளின் அல்லது கூட்டணிகளின் தேசியப்பட்டியலுக்குள் புகுந்துவிட்டார்கள்.
ஜனாதிபதித் தேர்தலில் பாரம்பரிய அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களை நிராகரித்து தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்கவை மக்கள் ஜனாதிபதியாக தெரிவு செய்யாமல் விட்டிருந்தால் இந்த அரசியல்வாதிகளில் எவரும் பாராளுமன்றத் தேர்தலில் இருந்து ஒதுங்குவது குறித்தோ அல்லது அரசியலில் இருந்து ஓய்வு பெறுவது குறித்தோ ஒரு போதும் சிந்தித்திருக்கவே மாட்டார்கள். ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் வெற்றி இலங்கை அரசியலில் ஓய்வு என்ற ஒரு புதிய அம்சத்தை அறி முகப்படுத்தியிருப்பதாகவும் அல்லாவிட்டால் அரசியல்வாதிகள் தோல்வி கண்டால் அல்லது இறந்தால் மாத்திரமே அவர்களின் ஓய்வைக் கண்ட ஓர் ஆரோக்கியமற்ற அரசியல் கலாசாரமே இலங்கையில் நீடித்து வந்ததாகவும் ஜனாதிபதி திசாநாயக்கவும் தேசிய மக்கள் சக்தியின் பல தலைவர்களும் பெருமையுடன் கூறுகிறார்கள்.
நாட்டின் சமூக, அரசியல், பொருளாதார நெருக்கடிக்கு காரணமான ஜனாதிபதிகளுக்கு உறுதுணையாகச் செயற்பட்ட பலர் எதிர்க்கட்சிகளின் வேட்பாளர்கள் பட்டியலில் இடம்பெறுகிறார்கள். ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் கூறிய செய்தியை அவர்கள் தெளிவாகப்புரிந்து கொள்வில்லைப்போலும். தவறான ஆட்சிமுறைக்கும் ஊழல் மோசடிகளுக்கும் உறுதுணையாகச் செயல்பட்ட எஞ்சிய அரசியல்வாதிகளையும் அரசியல் பக்கமே இனிமேல் அவர்கள் திரும்பிப்பார்க்கவே நினைக்காத முறையில் பாராளுமன்ற தேர்தலில் தோற்கடித்து வீட்டுக்கு அனுப்புவதற்கு பாராளுமன்ற தேர்தலை மக்கள் பயன்படுத்த வேண்டும். இது தெற்கிற்கு மாத்திரமல்ல, வடக்கு, கிழக்கிற்கும் பொருந்தும்.