நாடாளுமன்றம் மற்றும் அரசியல் கட்சிகள் மீதான மக்களின் நம்பிக்கை குறைவடைந்துள்ளதாகவும், நாடாளுமன்றத்தின் மீது 22 சத வீதமான மக்களும், அரசியல் கட்சிகள் மீது, 19 சத வீதமான மக்களும் நம்பிக்கை கொண்டிருப்பதாக, மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் தெரிவித்துள்ளது.
அண்மையில் நடத்திய ஆய்வில், இந்த விடயம் தெரியவந்துள்ளது.
‘இலங்கையில், ஜனநாயகம் மற்றும் நல்லிணக்கம் பற்றிய கணக்கெடுப்பு’ என்ற தலைப்பில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், கடந்த ஜனவரி மாதம், 25 மாவட்டங்களில் ஆயிரத்து 350 பேர் பங்கேற்றனர்.
ஆய்வின்படி, இராணுவம் மற்றும் நீதிமன்றங்கள், நாட்டின் மிகவும் நம்பகமான நிறுவனமாக அந்தஸ்தை அனுபவிக்கின்றன.
அதேசமயம், இராணுவம் மற்றும் நீதிமன்றங்களுடன் ஒப்பிடும் போது, பொலிஸ் துறை, ஒப்பீட்டளவில் குறைவான மக்கள் நம்பிக்கையை கொண்டுள்ளது.
இராணுவம் மற்றும் நீதிமன்றங்களுடன் ஒப்பிடுகையில், சட்டமியற்றும் நிறுவனங்கள் மற்றும் சட்டத்தை உருவாக்குவதில் பங்கேற்கும் நிறுவனங்கள், அரசியல் கட்சிகள் மீதான பொது மக்களின் நம்பிக்கை குறைவடைந்துள்ளது.
கடந்த தசாப்தத்தில், இது பெரும் சரிவை சந்தித்துள்ளது.
2011 ஆம் ஆண்டு, 63 வீதமான மக்கள் நாடாளுமன்றத்தை நம்பினர்.
ஆனால், 2024 இல், 22 வீதமான மக்கள் நாடாளுமன்றத்தை நம்புகின்றனர்.
இந்தக் கணக்கெடுப்புத் தொடரில் சோதிக்கப்பட்ட நிறுவனங்களில்,
அரசியல் கட்சிகள் மீது, மக்களின் நம்பிக்கை பெருமளவில் குறைந்துள்ளது.
அரசியல் கட்சிகள் மீதான மக்களின் நம்பிக்கை, 2011 ஆம் ஆண்டு 56 வீதமாக இருந்த நிலையில், 2024 இல், 19 வீதமாக குறைந்துள்ளது.
இதேவேளை, ஏறத்தாழ பத்தில் ஒரு இலங்கையர்கள், சர்வாதிகார ஆட்சிக்கு விருப்பம் தெரிவித்துள்ளனர்.
பெரும்பான்மையான மக்கள், ஜனநாயக ஆட்சியை ஆதரிக்கின்ற போதிலும், ‘சில சந்தர்ப்பங்களில், ஜனநாயக ஆட்சியை விட, சர்வாதிகார அரசாங்கம் விரும்பத்தக்கதாக இருக்கும்’ என்ற கருத்தை முன்வைத்துள்ளனர்.
என மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் தெரிவித்துள்ளது.