அரசியல் கட்சி அறிவிப்புக்குப் பிறகு முதல் முறையாக நடிகர் விஜய் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் முன்னிலையில் பேச உள்ளார். அதில் அரசியல் பேச்சு இடம் பெற வாய்ப்பு இருக்கிறது என எதிர்பார்க்கப்படுகிறது. நடிகர் விஜய் தன்னுடைய அரசியல் கட்சியை கடந்த பெப்ரவரி இரண்டாம் திகதி அறிவித்தார்.
தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கிய பிறகு, விஜய் இன்னும் பொது நிகழ்வு எதிலும் கலந்து கொள்ளவில்லை.சி.ஏ.ஏ குறித்து மட்டும் கருத்து தெரிவித்திருந்த விஜய், மற்ற எந்த அரசியல் நிகழ்வுகளுக்கும் பேசவில்லை. இந்த நிலையில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வுகளில் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்கள் பிடித்த மாணவ மாணவிகளை நேரில் அழைத்து ஊக்கத்தொகை வழங்கி பாராட்டு சான்றிதழ் வழங்க உள்ளார்.அதிக மதிப்பெண் பெற்றவர்கள் மட்டுமல்லாமல் தாய், தந்தை ஆகிய இருவரையும் இழந்து வறுமையில் வாடும் மாணவர்களுக்கும் ஊக்கத்தொகை வழங்குகிறார். இதன்மூலம் சுமார் 1500 மாணவ மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு இருக்கின்றனர்.
அரசியல் கட்சி தொடங்குவதற்கு முன்பு கடந்த ஆண்டு நடைபெற்ற ஊக்கத்தொகை வழங்கும் விழாவில், நடிகர் விஜய் சுமார் 10 நிமிடம் உரையாற்றினார். அதில் காமராஜர், அம்பேத்கர், பெரியார் ஆகியோர் பற்றி தெரிந்து கொள்ளுங்கள் என கூறியிருந்தார். அது மட்டும் இல்லாமல் உங்களுடைய பெற்றோர்களிடம் பணம் வாங்காமல் உங்களுடைய தலைவரை தேர்வு செய்ய கூறுங்கள் எனவும் பேசினார். இது அவருடைய அரசியல் நிலைப்பாடு குறித்த பேச்சு என்றும் அரசியல் விமர்சிகர்களால் பார்க்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு நடிகர் விஜய் எந்த நிகழ்ச்சியிலும் அரசியல் குறித்து பேசவில்லை. இதனால் தற்போது நடைபெற உள்ள நிகழ்ச்சியின் மீது அதிக கவனம் திரும்பியுள்ளது. குறிப்பாக, ஜூன் நான்காம் தேதி நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, விஜயின் அரசியல் பயணம் வேகம் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது . அதன் முதல் கட்டமாக இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அதில் நடிகர் விஜய் நிச்சயம் அரசியல் பேசுவார் என கூறப்படுகிறது.
அதிலும் 10 முதல் 15 நிமிடம் வரை அவருடைய பேச்சு இருக்கும் அதில் சில முக்கிய விஷயங்கள் குறித்து பேசுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.ஊக்கத்தொகை வழங்கும் விழாவிற்கு பிறகு, விஜய் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் அறிவிப்பு வெளியாக உள்ளது. அதன் பின் மாற்று கட்சியில் இருந்து தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சியில் சேர்க்கும் பணி தொடங்க உள்ளது. அதை தொடர்ந்து முதல் அரசியல் மாநாடு என அடுத்தடுத்த அரசியல் நிகழ்வுகளை விஜய் நடத்த உள்ளார். அதற்கு முதல் கட்டமாகவே இந்த ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி அமைந்துள்ளது.