அரசியல் தீர்வின் எதிர்காலம்?

0
119

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சர்வகட்சி கூட்டம் எதிர்பார்த்த விளைவுகளை தரவில்லையென்று தமிழக் கட்சிகள் கூறுகின்றன.
அரசியல் தீர்வு விடயத்தில் ரணிலின் நகர்வுகள் சந்தேகமளிக்கின்றன என்று பிரதான எதிர்க்கட்சி கூறுகின்றது.
ஆனால், ஜனாதிபதியின் கருத்துக்கள் இரண்டு விடயங்களை மிகவும் தெளிவாக உறுதிப்படுத்துகின்றன.
ரணில் ஒரு தேர்தலுக்கு சென்றால் அது ஜனாதிபதித் தேர்தல் மட்டும்தான்.
அதன் பிறகுதான் எந்தவொரு தேர்தல் தொடர்பிலும் சிந்திக்க முடியும்.
இரண்டாவது, அனைவரதும் உடன்பாட்டோடும்தான், அரசியல் தீர்வு தொடர்பில் எந்தவொரு முடிவையும் எடுக்க முடியும்.
இப்போது தமிழர் தரப்புகள் என்ன செய்வது? ஒன்றில் அடுத்த ஜனாதிபதி தேர்தல்வரையில் அமைதியாக விடயங்களை அவதானித்துக் கொண்டு, தமிழர்களின் பேரம்பேசும் அரசியலை பலப்படுத்த வேண்டும்.
ஏனெனில், ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க வெற்றிபெற்றாலும் அடுத்த நிலையில், பாராளுமன்றத்தை முழுமையாக அவரால் கட்டுப்படுத்த முடியுமா என்னும் கேள்வி எழலாம்.
ஏனெனில், தற்போதுள்ள நிலையில், ஒரு தனிக்கட்சியால் பாராளுமன்ற பெரும்பான்மையை நிலைநாட்ட முடியாது.
ரணில் விக்கிரமசிங்க எந்தவொரு சிக்கலான முடிவுகளையும் எடுக்கப்போவதில்லை.
ஏனெனில், அவர் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற வேண்டுமாயின், தென்னிலங்கையின் பெரும்பாலானவர்களது ஆதரவு தேவை.
அதற்குள் கடும்போக்கு தரப்புகளும் அடங்குவர்.
இந்த நிலையில், ரணிலின் சர்வகட்சி கூட்டங்கள் பெரியளவில் வெற்றிபெறப்போவதில்லை.
இதுவரையில் 13ஆவது திருத்தச்சட்டத்தை தாண்டிச்செல்லும் நிலையில் பேசப்பட்ட விடயங்கள் தற்போது, பொலிஸ் அதிகாரம் நீக்கப்பட்ட 13ஆவது திருத்தச்சட்டத்தை நோக்கி கீழிறங்கியிருக்கின்றது.
கோட்டாபய ராஜபக்ஷவிடமும் இவ்வாறானதொரு பார்வையே இருந்தது.
இந்திய வெளிவிவகார செயலாளர் ஹர்ஸவர்தன் முன்னிலையிலேயே, 13இல் பிளஸூம் உண்டு, மைனஸூம் உண்டு – என்றவாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்தியாவை பொறுத்தவரையில், 13ஆவது திருத்தச்சட்டத்தை அவ்வாறு பிளஸ் – மைனஸ் என்று நோக்கவில்லை.
உண்மையில், தென்னிலங்கை அரசியலானது, அதிகார மாற்றத்துக்கான நிலைமாறு காலத்தில் இருக்கின்றது.
ஒருபுறம் ராஜபக்ஷக்களின் வீழ்ச்சி, மறுபுறம் நாட்டுக்கு யார் தலைமை தாங்குவதென்னும் கேள்வியுடன் தென்னிலங்கை அரசியல் நகர்கின்றது.
இதற்கிடையில்தான், ரணில் அரசியல் தீர்வு தொடர்பில் பேசி வருகின்றார்.
தமிழ் கட்சிகளை பொறுத்தவரையில், சமஷ்டியை அடையும் வழியும் தெரியாமல் – 13ஆவது திருத்தச் சட்டத்தைக் கூட முழுமையாக அமுல்படுத்துவதற்கான அழுத்தங்களை பிரயோகிக்க முடியாமல் – எவரிடம் செல்வதென்று தெரியாமல் தடுமாறுகின்ற நிலையிலேயே இருக்கின்றன.
எல்லாவற்றுக்கும் சர்வதேசத்திடம் முறையிடக்கூடாதென்று அமெரிக்கத் தூதுவர் கூறிய பின்னர், எவரிடம் சென்று எதைச்சொல்வது? ஒற்றையாட்சிக்குள் தீர்வில்லையென்று கூறுகின்ற கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் தனது கொள்கையை நிலைநாட்ட இலட்சக்கணக்கான தமிழ் மக்களைத் திரட்டி போராடும் நிலையில் இல்லை.
அதற்கான சிறு அசைவுகூட காங்கிரஸ் (முன்னணி) பக்கத்திலிருந்து வரவில்லை.
சமஷ்டிக்காக போராடுவோம், வாருங்களென்று அழைப்புவிடுத்தால், ஆயிரமளவில் மக்கள் வருவார்களா என்பதே சந்தேகம்.
இந்த நிலையில் தமிழ் அரசியல் தரப்புகள் என்ன செய்யப்போகின்றன?