தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் எப்போதாவது பேசுகின்றார்.
சில மாதங்களுக்கு ஒருமுறை அவர் கூறினாரென சில செய்திகள் வருவதுண்டு.
இப்போதும் அவ்வாறானதொரு செய்தி வெளியாகியிருக்கின்றது.
அரசாங்கங்கள் தமிழ் மக்களின் இனப்பிரச்னைக்கான தீர்வை இழுத்தடித்து வருகின்றன எனக் கூறியிருக்கும் சம்பந்தன், இதனை நாம் இனியும் அனுமதிக்க முடியாதென்று தெரிவித்திருக்கிறாரென செய்திகள் வெளியாகியிருக்கின்றன.
சம்பந்தனின் இவ்வாறான கருத்துக்களை ஆகக்குறைந்தது கூட்டமைப்பில் உள்ளவர்கள்கூடக் கவனிப்பதாகத் தெரியவில்லை.
இலங்கை தமிழ் அரசு கட்சி 1949இல் உருவாக்கப்பட்டது.
தமிழ் அரசு கட்சியின் ஆங்கிலப் பெயர் சமஷ்டி கட்சியாகும்.
அதாவது, சமஷ்டி தீர்வை அடைவதுதான் தமிழ் அரசு கட்சியின் இலக்கு.
ஆனால், அதனை ஒரு பாய்ச்சலில் அடைய முடியுமென்று செல்வநாயகம் நம்பியிருக்கவில்லை.
அவ்வாறு நம்பியிருந்தால் அவர் பண்டா – செல்வா பின்னர், டட்லி – செல்வா உடன்பாடுகளுக்கு சென்றிருக்க மாட்டார்.
மேற்படி இரண்டு உடன்பாடுகளும் சமஷ்டிக்கு அருகில்கூட இல்லை.
ஆனாலும் முதலில் சில விடயங்களை எடுத்துக் கொண்டு பின்னர் படிப்படியாக முன்னேறலாம் என்பதே செல்வாவின் அரசியலாக இருந்தது.
எனினும், அப்படியான குறைந்தளவான அரசியல் தீர்வைக்கூட சிங்கள ஆளும் வர்க்கம் தரமறுத்த நிலையில்தான் செல்வநாயகம் தனிநாட்டுக் கோரிக்கையை நோக்கி நகர்ந்தார்.
ஆனால், தனிநாட்டை எவ்வாறு அடைவதென்று செல்வநாயகம் அறிந்திருக்கவில்லை.
ஓர் உத்வேகத்தில் அவ்வாறானதொரு நிலைப்பாட்டுக்குத் தாவினாரே தவிர, அவரிடம் அதனை அடைவதற்கான எந்தவொரு திட்டமும் இருந்திருக்கவில்லை.
1977 பொதுத் தேர்தலில், தனிநாட்டு கோரிக்கையை முன்வைத்து தமிழர் விடுதலைக் கூட்டணி பெரும் வெற்றிபெற்றது.
அமிர்தலிங்கம் எதிர்கட்சித் தலைவரானார்.
அதன் பின்னர் தனிநாட்டை அடைவதற்குக் கூட்டணி என்ன செய்தது? எவ்வாறு சமஷ்டியை இலக்காகக் கொண்டிருந்த செல்வநாயகம் அதனைவிடவும் மிகவும் குறைவான அரசியல் தீர்வு தொடர்பில் சிந்தித்தாரோ அவ்வாறுதான் தனிநாட்டுக்கான குரலாக தன்னை முன்னிறுத்தியிருந்த அமிர்தலிங்கம் மாவட்ட சபை தொடர்பில் சிந்திக்கும் நிலைக்குக் கீழிறங்கினார்.
இந்த இடத்தில்தான், ஆயுதத்தால் அனைத்தையும் அடைய முடியுமென்று நம்பிக் கொண்டிருந்த இயக்கங்கள் தனிநாட்டு கோரிக்கையை தத்தெடுத்துக் கொண்டன.
ஆனால், அப்போதும் இந்தியாவால் ஒரு தெளிவான செய்தி சொல்லப்பட்டது.
அதாவது, இந்தியா தனிநாட்டை ஒருபோதும் ஆதரிக்காது – அதேவேளை அனுமதிக்கவும் மாட்டாதென்னும் தெளிவான செய்தி இயக்கங்களின் தலைவர்களுக்கு சொல்லப்பட்டது.
இதற்கான சாட்சிகளாக சிலர் இப்போதும் வாழ்கின்றார்கள்.
இந்திய – இலங்கை ஒப்பந்தத்தை தொடர்ந்து மாகாண சபை முறைமையே தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வாக முன்வைக்கப்பட்டது.
அதனை ஏற்க புலிகள் மறுத்தனர். அமிர்தலிங்கமும் தேர்தலில் போட்டியிட மறுத்தார்.
இந்தப் பின்னணியில்தான் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி களமிறங்கியது.
இன்று அரசியல் தீர்வு விடயத்தில் எஞ்சிக் கிடப்பது இந்த மாகாணசபை ஒன்றுதான்.
யுத்தமில்லாத கடந்த பன்னிரெண்டு வருடங்களில் அரசியல் தீர்வு தொடர்பில் ஏராளம் பேசப்பட்டாலும் எதுவும் நடக்கவில்லை.
இனியும் நடக்கும் என்பதற்கு என்ன உத்தரவாதம்? வாய்ப்புக்களை தவறவிட்டுவிட்டு, அரசியல் தீர்வை பேசிக் கொண்டிருந்தமையால் தமிழர்கள் இழந்தவைகளோ ஏராளம் – இப்போதும் இழந்து கொண்டே இருக்கின்றனர்.
இன்று கிழக்கு மாகாணம் கணிசமாகப் பறிபோய்விட்டது.
இருப்பதை உச்சபட்சமாகப் பயன்படுத்தும் பொறிமுறையை வகுக்காது விட்டால் நிலைமை மென்மேலும் மோசமடைந்து கொண்டே செல்லும்.
உண்மையில் அரசியல்வாதிகள் இப்போது யாருக்காக அரசியல் தீர்வு தொடர்பில் பேசுகின்றார்கள் என்பதே தெளிவில்லாமல் போய்விட்டது.
மக்களுக்காகவா அல்லது தங்களின் பாராளுமன்ற இருப்புக்காகவா?