அரசியல் தீர்வை அடையும் வழி?

0
146

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு என்ன – இப்படியொரு கேள்வியை எழுப்பினால் – தமிழ்த் தேசிய பரப்பிலுள்ள அனைவராலும் பதிலளிக்க முடியும். கூட்டமைப்பினர் சமஷ்டி என்பார்கள். முன்னணியினர் ஒரு நாடு இரு தேசங்கள் தீர்வு என்பார்கள். விக்னேஸ்வரன் கூட்டுச் சமஷ்டி என்பார். இவ்வாறு பதிலளிப்பவர்களிடம் – சரி, நீங்கள் கூறுவதை எவ்வாறு அடையப் போகின்றீர்கள் -அதற்கான வழிமுறையென்ன என்று கேட்டால், அவர்கள் எவரிடமும் பதிலிருக்காது. ஒரு காலத்தில் தனிநாட்டு கோரிக்கையை முன்வைத்த தமிழர் விடுதலைக் கூட்டணியிடம் அதனை அடைவதற்கான எந்தவொரு வழிமுறையும் இருந்திருக்கவில்லை.

விடுதலை இயக்கங்களிடம் ஒரு தெளிவான பதிலிருந்தது. அதாவது, ஆயுத பலம் கொண்டு தனிநாட்டை அடைவது. இந்தியாவின் நேரடியான தலையீட்டைத் தொடர்ந்து விடுதலைப் புலிகள் தவிர்ந்த ஏனைய பிரதான இயக்கங்கள் அனைத்தும் தனிநாட்டுக்கான ஆயுத விடுதலைப் போராட்டத்தின் மூலமும் தனிநாட்டை அடைய முடியாதென்னும் நிலைப்பாட்டிற்கு வந்தன. ஏனெனில், இந்தியா தனிநாட்டை ஆதரிக்காது என்பது தெளிவாகத் தெரிந்துவிட்டது. விடுதலைப் புலிகள் மட்டுமே தனிநாட்டை ஆயுத பலம் கொண்டு தங்களால் அடைய முடியுமென்னும் நம்பிக்கையுடன் செயல்பட்டனர். 2009உடன் அதுவும் முடிவுக்கு வந்தது.

இப்போது ஜனநாயகவாதிகளும் தோல்வியடைந்திருக்கின்றனர். ஆயுத விடுதலை அமைப்புக்களும் தோல்வியடைந்திருக்கின்றனர். இரண்டு தோல்வி அனுபவங்களின் வழியாக அரசியலை விளங்கிக்கொள்ளும் அனுபவம் ஈழத் தமிழர்களுக்கு கிடைத்திருக்கின்றது. இதனைக் கொண்டு தமிழ்த் தேசிய தரப்புக்களால் ஆக்கபூர்வமாக சிந்திக்க முடிகின்றதா? எதிர்காலத்தை வரையறுக்க விரும்பினால் கடந்த காலத்தை படி – என்றொரு கூற்றுண்டு. ஈழத் தமிழர்களின் கடந்த காலம் தெளிவான படிப்பினைகளை தந்திருக்கின்றது. இந்த படிப்பினைகளிலிருந்து சிந்தித்தால், அரசியல் தீர்வு தொடர்பில் முரண்பட வேண்டியதில்லை. அது தொடர்பில் தாங்களும் குழம்பி மக்களையும் குழப்ப வேண்டியதில்லை. ஏனெனில், அரசியல் தீர்வு தொடர்பில் – யார் புனிதர்களென்னும் விவாதத்தை தூண்ட முற்படும் எவரிடமும் தாங்கள் கூறுவதை அடையும் வழிமுறைகள் இல்லை. ஒரு விடயத்தை அடைவதற்கான வழிமுறைகள் தெரியாத போது, மற்றவர்கள் தவறான வழியில் செல்வதான விவாதங்கள் பயனற்றவை.தமிழ் தேசிய அரசியல் கட்சிகள் என்போர் இதனை தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும்.

தமிழ் தேசிய அரசியல் நோக்கம் கொண்டவர்களாக தங்களை காண்பிக்க முயற்சிக்கும் சிவில் சமூகங்களும் இதனை தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். புரிந்து கொண்டால் அதிக முரண்பாடுகளை தவிர்க்கலாம். ஒவ்வொருவரும் அவர்களின் பாதையில் மற்றவர்களோடு முட்டுப்படாமல், மற்றவர்களுக்கு முகவர் பட்டம் சூட்டாமல் பயணம் செய்ய முடியும். இன்றைய சூழலில் சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வை அடைவதற்கான தெளிவான வழிமுறைகள் இல்லை. அதேவேளை எந்தவொரு வெளிநாட்டு தரப்பும் ஈழத் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வுக்காக, சிங்களவர்களின் குரல் வளையை நசுக்கப் போவதில்லை. இதுதான் யதார்த்தம்.

ஒருவேளை, பல வருடங்களுக்கு பின்னர் சில வாய்ப்புக்கள் வரலாம். ஆனால், அதுவரைக்கும் ஈழத் தமிழர்கள் ஓர் இனமாக வடக்கு, கிழக்கில் வாழ்வது முக்கியம். அதற்கான ஏற்பாடுகளை தக்கவைப்பது தொடர்பில் சிந்தித்து செயல்படுவதுதான் இப்போது தமிழ் தேசிய தரப்புக்கள் செய்ய வேண்டியது. பொறுப்புக்கூறல் தொடர்பான அழுத்தங்கள் என்று கூறப்படுபவைகளால், அரசியல் தீர்வு கிடைக்கப் போவதில்லை. ஒருவேளை அவ்வாறு எவரேனும் நம்பினால் பொறுப்பு கூறல் எப்போது நிகழும் என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை. அதுவரைக்கும் ஒரு சிறிய இனமான, ஈழத் தமிழர்களால் தங்களைத் தற்காத்து கொள்ள முடியுமா? எவ்வாறு? கடந்த பன்னிரெண்டு வருடங்கள், பொறுப்புக் கூறல் தொடர்பான சர்வதேச அழுத்தங்களின் பலவீனத்தை நமக்கு உணர்த்தியிருக்கின்றது.