மார்ச் 9ஆம் திகதி திட்டமிட்டபடி உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். எமது முயற்சிகளுக்கு திறைசேரி மற்றும் ஏனைய அரச நிறுவனங்கள் ஒத்துழைக்கத் தவறினால் அவற்றுக்கு எதிராக உயர்நீதிமன்றில் வழக்கு தொடருவோம் என தேர்தல் ஆணைக்குழு எச்சரிக்கை விடுத்துள்ளது. தேர்தல் நோக்கங்களுக்காக திறைசேரியிலிருந்து மெதுவாகவே நிதி வழங்கப்படுகின்றது. பெப்ரவரி இறுதிவரை தேர்தல் செலவுக்காக 80 கோடி ரூபாயை தேர்தல் ஆணைக்குழு கேட்டுள்ளது. ஆனால், 10 கோடி ரூபாயே வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார். தேர்தலை நடத்துவதற்குத் தேவையான நிதி விடுவிக்கப்படவில்லை. தேர்தல் அதிகாரிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதுவும் செய்யப்படவில்லை. அரசமைப்பு சட்டத்தின் கீழ் எதிர்பார்க்கப்படும் திறைசேரி உள்ளிட்ட அரச நிறுவனங்கள் எவையும் தேர்தல் ஆணைக்குழுவுக்கு ஒத்துழைப்பு தரவில்லை. இவற்றுக்கு எதிராக உயர்நீதி மன்றை நாட வேண்டியிருக்கும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.