அரச மிலேச்சத்தனத்தை அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
கடந்த மே 9ஆம் திகதி அரச வன்முறையை முன்னெடுத்த ராஜபக்சர்கள் மற்றும் அந்த கும்பல்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னவென்றும் எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கேள்வி எழுப்பியுள்ளார்.
வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரபல நடிகை தமிதா அபேரத்னவின் நலன் விசாரிப்பதற்காக சென்ற எதிர்க் கட்சித் தலைவர், பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது மேலும் தெரிவித்துள்ள அவர்,
நடிகை தமிதா என்பவர் மிகவும் புகழ்பெற்ற அதேபோன்று தனது நடிப்புத் திறமையால் பலசன்மானங்களை பெற்றுக்கொண்ட நடிகையாவார்.
எந்த சந்தர்ப்பத்திலும் இவ்வாறான திறமையாளர்கள் ஜனநாயக விரோத செயற்பாடுகளினூடாக தங்களது கருத்துக்களை தெரிவிப்பதில்லை. ஜனநாயக விரோத செயற்பாடுகளில் ஈடுபடுவதும் இல்லை.
நடிகை தமிதா எந்த சந்தர்ப்பத்திலும் ஜனநாயகத்துக்கு விரோதமாக பயணித்தவர் அல்ல.
அவர் தனது எதிர்ப்பை தெரிவித்திருக்கக் கூடும். எனினும் அவர் ஜனநாயக விரோத செயற்பாடுகளில் ஈடுபடவில்லை.
நாட்டு மக்களுக்காகவே அவர் குரல் கொடுத்தார். நாட்டு மக்களுக்காகவே வீதிக்கு இறங்கி போராடினார்.
நாட்டு மக்களுக்காக குரல் கொடுத்த ஒரு தலைவியாகவே அவரை நாம் பார்க்கின்றோம்.
எந்த காரணத்தை அடிப்படையாக வைத்து நடிகை தமிதா அபேரத்னவை பழிவாங்குகின்றார்கள் என்றே அரசாங்கத்திடம் நாம் கேட்கின்றோம்.
இது உண்மையில் வேட்டையாடும் செயலை போன்றது.
மே ஒன்பது வன்முறையுடன் தொடர்புடைய ராஜபக்ஷர்ளுக்கு எதிரான விசாரணைகள் எங்கே?
மாறாக தமிதா அபேரத்னவை போன்ற கலைஞர்கள், இளைஞர், யுவதிகளை கைதுசெய்வதன் மூலம் அரச மிலோச்சத்தனத்தை காட்டுவதையே அரசாங்கம் செய்வது வருகின்றது.
இதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றார்.