இலங்கையில் பாதுகாப்பு அச்சுறுத்தல் நிலவுவதாக வெளிநாடுகள் பயண எச்சரிக்கை விடுத்துள்ளமைக்கு இலங்கையின் சுற்றுலாத்துறை கூட்டமைப்பு கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது.
பயங்கரவாத தாக்குதல் இடம்பெறலாம் என விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கையால் இலங்கையின் சுற்றுலாத்துறைக்கு பாரிய பின்னடைவு ஏற்படலாம் என ஸ்ரீலங்கா சுற்றுலத்துறை கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
அமெரிக்காவும் அதன் பின்னர் வேறு சில நாடுகளும் விடுத்த பயண எச்சரிக்கை சுற்றுலாத்துறைக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என அந்த அமைப்பு கரிசனை வெளியிட்டுள்ளது.
வெளிநாட்டு தூதரகங்கள் இலங்கை குறித்தும் அதன் பொருளாதார மீட்சிக்கு அவசியமான சுற்றுலாத்துறை குறித்தும் ஈவிரக்கமற்ற வேடிக்கையில் ஈடுபட்டுள்ளனவா என என ஸ்ரீலங்கா சுற்றுலத்துறை கூட்டமைப்பின் தலைவர் மலிக் ஜே பெர்ணாண்டோ கேள்வி எழுப்பியுள்ளார்.
இலங்கை அதிகாரிகள் ஏற்கனவே நடவடிக்கைகளை எடுத்துள்ளனர் இருவரை கைதுசெய்துள்ளனர் என்பதை சுற்றுலாத்துறை அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
புதிய தகவல்களை உள்வாங்கி திருத்தம் செய்யப்படாத வெளிநாட்டு தூதரகங்களின் அறிக்கை இலங்கை குறித்தும் அதன் சுற்றுலாத்துறை மீது அவற்றிற்கு அக்கறை இல்லை என்பதை வெளிப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ள ஸ்ரீலங்கா சுற்றுலத்துறை கூட்டமைப்பு சமீபத்தைய பொருளாதார நெருக்கடியின் பாதிப்பில் இன்னமும் சிக்குண்டுள்ள மில்லியன் கணக்கான கிராமிய மக்களை கைதூக்கிவிடுவதில் சுற்றுலாத்துறை குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குகின்றது என தெரிவித்துள்ளது.
அறுகம் குடா குறித்த அமெரிக்காவின் எச்சரிக்கையை இஸ்ரேலிய ஊடகங்கள் பெரிதுபடுத்தின முழு இலங்கையும் இஸ்ரேலியர்களிற்கு பாதுகாப்பற்றது போன்ற உணர்வை ஏற்படுத்தின என சுற்றுலாத்துறை அமைப்பு தெரிவித்துள்ளது.